×

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்!!

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் சேலம், தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் தேனி, விருதுநகர், மதுரை, சேலம், நாமக்கல், கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அக்டோபர் 3ம் தேதி வரையில் மேற்கண்ட மாவட்டங்களில் கனமழை நீடிக்கும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.மேலும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : TN , வானிலை ஆய்வு மையம்
× RELATED சத்தியமங்கலம் – அத்தாணி சாலையோரம்...