×

ஊரக உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி வகுப்பு நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு இன்று 9 இடங்களில் 2ம் கட்ட தேர்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை  மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி  தேர்தல் அக்.6, 9ம் தேதிகளில் நடக்கிறது.  முதல் கட்டமாக அம்பை.,  சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி  ஆகிய 5  ஒன்றியங்களுக்கும், 2ம் கட்டமாக களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம்,   வள்ளியூர் ஆகிய 4 ஒன்றியங்களுக்கும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.  முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 621 வாக்குப்பதிவு மையங்களிலும்,  இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 567 வாக்குப்பதிவு மையங்களிலும்  நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் நடக்கும் இடங்களில் 5 ஆயிரத்து 37  அலுவலர்களும், 2ம்  கட்ட தேர்தலிலி 4,534 அலுவலர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும்  ரிசர்வ் ஊழியர்கள் என மொத்தம் 10 ஆயிரம் அலுவலர்கள் தேர்தல் பணியாற்ற உள்ளனர். தேர்தலில்  பணியாற்றும் அலுவலர்களுக்கு  முதல் கட்டமாக கடந்த 24ம் தேதி பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் 9 இடங்களில் இன்று 2ம் கட்ட பயிற்சி நடக்கிறது. அம்பை.   ஒன்றியத்திற்கு கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா  மேல்நிலைப்பள்ளியிலும், சேரன்மகாதேவி ஒன்றியத்திற்கு பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், களக்காடு  ஒன்றியத்திற்கு களக்காடு அரசு  மேல்நிலைப்பள்ளியிலும்,  மானூர்  ஒன்றியத்திற்கு மானூர் அரசு  மேல்நிலைப்பள்ளியிலும், நாங்குநேரி  ஒன்றியத்திற்கு தெற்கு விஜயநாராயணம்  ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியிலும், பாளை.  ஒன்றியத்திற்கு அரசு சட்டக்  கல்லூரியிலும், பாப்பாக்குடி  ஒன்றியத்திற்கு இடைகால் மெரிட் பாலிடெக்னிக்  கல்லூரியிலும், ராதாபுரம்  ஒன்றியத்திற்கு ராதாபுரம் எஸ்விசி அரசு  மேல்நிலைப்பள்ளியிலும், வள்ளியூர்  ஒன்றியத்திற்கு வள்ளியூர் திருச்சிலுவை  பாத்திமா நடுநிலைப்பள்ளியிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் வாக்குச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்கள் யார், யார் என்பது தெரிந்து விடும். இதன் மூலம் வாக்குச்சாவடியில் பணியாற்றும் தலைமை வாக்குச்சாவடி அலுவலர் உட்பட 7 அல்லது 8 அலுவலர்களும் குழுவாக இந்த பயிற்சியில் பங்கேற்பர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிக்கான பயிற்சி இன்று நடப்பதால், நெல்லை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து நெல்லை மாவட்ட முதன்மைக்கல்வி  அலுவலர் முத்துகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல்  வருகிற அக்.6 மற்றும் 9ம் தேதிகளில் நடக்கிறது. தேர்தலுக்கு ஆயத்தமாக தேர்தல் பணியில் ஈடுபடும்  அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு இன்று பயிற்சியில் பங்கேற்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்தல் பயிற்சியில் கலந்துகொள்ள ஏதுவாக  இன்று (29ம் தேதி) அனைத்து வகை பள்ளிகளுக்கும் (சிபிஎஸ்இ பள்ளிகள் நீங்கலாக) விடுமுறை அளிக்கப்படுகிறது. இவ்வாறு முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணி அலுவலர்களுக்கு அக்.5க்குள் தபால் வாக்கு: கலெக்டர்
நெல்லை கலெக்டர் விஷ்ணு கூறுகையில் ‘‘நெல்லை மாவட்ட  ஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக அக்.6, 9 ஆகிய தேதிகளில் நடக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் தபாலில் வாக்களிக்க  அவர்கள் வாக்கு எந்த ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளதோ அந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் படிவம்-15 பூர்த்தி செய்து அக்.2க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தபால் வாக்கு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு அக்.5ம் தேதிக்குள் தபால் மூலம் நான்கு வகையான தேர்தலுக்குரிய வாக்குசீட்டுகள், படிவம்-16ல் தேர்தல் பணி சான்று மற்றும் தேர்தல் அலுவலர் அளிக்க வேண்டிய உறுதிமொழி படிவம் -17 ஆகியவை அனுப்பி வைக்கப்படும். தபால் மூலம் வாக்குசீட்டு பெற்றவர்கள் தங்களின் வாக்கினை செலுத்தி, நான்கு வகையான தேர்தல்களுக்கான படிவங்கள் உறுதிமொழி (படிவம்-17) நான்கில் பூர்த்தி செய்து சுயஒப்பமிட்டு வாக்குச்சீட்டுகளை அதற்குரிய  தனித்தனி உறைகளில்  வைத்தும்,  படிவங்கள் 16 மற்றும் 17  (4 எண்ணம்) ஆகியவற்றுடன்   பெரிய உறையில்  வைத்து தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள தபால் வாக்குபெட்டியில் செலுத்த வேண்டும் அல்லது அஞ்சல் வழியாக வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாளில் காலை 8.00 மணிக்கு முன்பாக கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்’’ என்றார்.

உறுப்பினர் பதவிக்கு 11 லட்சம் வாக்குச்சீட்டுகள்: கலெக்டர் விஷ்ணு மேலும் கூறுகையில் ‘‘ஊரக உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள்  6,73,868 பேர் உள்ளனர். இதில்  ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் தேர்தலுக்குரிய வெள்ளை நிற வாக்குச்சீட்டுகள் 8,22, 200ம், ஊதா நிறத்திலான  வாக்குச்சீட்டுகள் 3 லட்சத்து 400ம் உள்ளது. இவ்வாறு ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு தேவையான அனைத்து வாக்குச்சீட்டுகளும் கையிருப்பில்  உள்ளன’’ என்றார்.

Tags : Nellai , Phase 2 training class for rural local government election officers is a holiday for Nellai district schools today
× RELATED நெல்லை மக்களவை தொகுதி பாஜ, அதிமுக வேட்பாளர்கள் சொத்து பட்டியல்