வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் கொட்டப்படும் குப்பைகளால் சுற்றுச்சூழல் சீர்கேடு

* மழை வெள்ளத்துடன் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்

* ஏரிகளிலும் குப்பைகள், கழிவுநீர் நிரம்பும் அவலம்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, விரிஞ்சிபுரம் உட்பட பாலாற்று படுகையை உள்ளாட்சி அமைப்புகளே குப்பை கிடங்காக மாற்றி, அதில் தற்போது ஓடும் வெள்ளநீரை கழிவுநீராக மாற்றியுள்ளதாக வேதனை குரல்கள் எழுந்துள்ளன.கர்நாடகத்தின் நந்திதுர்க்கத்தில் உற்பத்தியாகி தமிழகத்தின் கல்பாக்கம் அருகே வங்கக்கடலில் சங்கமிக்கும் பாலாறு, பருவமழையை மட்டும் நம்பியுள்ள ஆறாகும். இவ்வாறு பருவமழையின் போது மட்டும் பாலாற்றின் நீரை கூட அண்டை மாநிலங்கள் தடுப்பணைகள் மூலம் தடுத்து நிறுத்திய போதிலும் எப்போதாவது தொடர்ந்து பெய்யும் மழையால் தடையை மீறி வெள்ளத்தை காண்பதுண்டு.  இதனால் பெரும்பாலான காலங்களில் வறண்ட நிலையில் காட்சி தந்து, நீரில்லா ஆறு என்ற அவப்பெயரை தாங்கி நின்ற பாலாற்றின் மணல் வளம் ஒருபக்கம் கொள்ளை போக, தோல், ரசாயன தொழிற்சாலைகளின் கழிவுகள் மறுபக்கம் அதன் அடிமடியை நாசமாக்கி ைவத்தன.

அதேபோல் பாலாற்று படுகையை ஒட்டியுள்ள சிற்றூர், பேரூர், நகராட்சி, மாநகராட்சி என பாலாற்றின் கரையோரம் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், திட, திரவக்கழிவு மேலாண்மை திட்டங்களை தாங்கள் நடைமுறைப்படுத்தி வருவதாக கூறிக்கொண்டாலும், குப்பைகளையும், சாக்கடை நீரையும் பாலாற்றில் கொண்டு விடுவதை நிறுத்தவில்லை.பாலாறு வறண்ட பாலைவனமாய் மாறிய நிலையில் அப்படுகையில் கொட்டப்பட்ட குப்பைகள், கலக்கப்பட்ட கழிவுநீரை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் போதிய அளவில் மழை இந்த ஆண்டு பெய்யும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புக்கு ஏற்ப தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை நீர் தடையின்றி செல்லும் வகையில் நீர்நிலைகளையும், நீர்வரத்து பாதைகளையும் சீரமைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது.ஆனால், வேலூர் மாவட்டத்தில் விரிஞ்சிபுரம் பாலாற்றில் இரண்டு கரைகளையும் தொட்டு செல்லும் பாலாற்றின் இருகரையோரமும் குவிக்கப்பட்டுள்ள குப்பை கூளங்கள் பாலாற்று வெள்ளநீருடன் கலந்து ஓடும் அவலநிலை மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் மக்கள் பாதிப்படைகின்றனர். அதேபோல் பொய்கை, மேல்மொணவூர், சேண்பாக்கம், வேலூர், சத்துவாச்சாரி, ரங்காபுரம், அலமேலுமங்காபுரம் பகுதிகளிலும் பாலாற்றங்கரையில் குவிக்கப்பட்டுள்ள குப்பை குவியலுக்கும், கலக்கும் சாக்கடை நீருக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படாமல் அவை பாலாற்று வெள்ளத்தில் கலந்து பாய்ந்து கொண்டுள்ளது சமூக ஆர்வலர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.இப்படி குப்பைகூளங்களுடன், சாக்கடை நீரும் கலந்து கழிவுநீராக மாறி ஓடி வரும் நீரைத்தான் ஏரிகளுக்கு நீர்வரத்துக்கால்வாய்கள் மூலம் திருப்பி விட்டுள்ளனர். எனவே, உடனடியாக பாலாற்றங்கரையோரம் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் போர்க்கால அடிப்படையில் பாலாற்றங்கரையோரம் குவித்துள்ள திடக்கழிவுகளை அகற்றுவதுடன், பாலாற்றில் கலக்கும் திரவக்கழிவுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>