×

காட்பாடி கழிஞ்சூர் ஏரியில் 25 கோடியில் செயற்கை தீவு, உல்லாச படகு சவாரிக்கு ஏற்பாடு: அமைச்சர் துரைமுருகன் தகவல்

வேலூர்: காட்பாடி கழிஞ்சூர் ஏரியில் 25 கோடி மதிப்பீட்டில் செயற்கை தீவு, பொழுது போக்குவதற்கு ஏற்ப உல்லாச படகுகளும் விடப்படும் என்று கழிஞ்சூர் ஏரி கோடி போகும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கனிமம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தற்போது பாலாற்றில் வெள்ளம் சென்று கொண்டுள்ளது. பாலாற்றில் வரும் வெள்ளநீர் அதை நம்பியுள்ள ஏரிகளுக்கு திருப்பிவிடும் வகையில் நீர்வரத்துக்கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. இந்நிலையில், பாலாற்றில் வரும் வெள்ள நீர் கழிஞ்சூர் ஏரிக்கு திருப்பிவிடப்பட்டதால் நேற்று அதிகாலை 1 மணியளவில் ஏரி நிரம்பி கோடி போய் உபரி நீர் தாராபடவேடு, பிரம்மபுரம், சேவூர், கார்ணாம்பட்டு, அன்பூண்டி ஏரிகளுக்கு சென்று கொண்டுள்ளது.கழிஞ்சூர் ஏரியில் நிரம்பி வழியும் நீரை அதன் கோடி போகும் பகுதியில் கனிமம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பூக்களை தூவி வரவேற்றார். தொடர்ந்து அவர் பேசும்போது, ‘இன்றைய தினம் பாலாற்றில் அத்திப்பூத்தாற்போல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் நீரால் ஏற்கனவே கால்வாய் தூர்வாரப்பட்ட நிலையில் கழிஞ்சூர் ஏரி நிரம்பி கோடி போனதுடன், காட்பாடி ஏரியும் நிரம்பி வருகிறது. ஏரியில் அதிகளவில் வரும் வெள்ள நீர் தரைப்பாலத்துக்கு மேல் சென்று கொண்டிருக்கிறது. இதனால் இங்கு ஒரு உயர்மட்ட பாலம் கட்டித்தரப்படும்.

கழிஞ்சூர், காட்பாடி ஏரிகள் கரை உயர்த்தி தூர்வாரப்பட்டதால் இப்போது நிரம்பியுள்ளன. முன்பு இந்த ஏரிகளால் இப்பகுதியில் விவசாயம் இருந்தது. பின்னர் நீர் இல்லாமல் வறண்டு போனது. தற்போது நீர் நிரம்பியுள்ளதால், பூமியில் நீர்மட்டம் உயர்ந்து அதன் உப்புத்தன்மை மாறும். இனி தொடர்ந்து ஏரிகளுக்கு நீர்வரத்து இருக்கும்.இந்த ஏரிகளை இப்படியே விட்டால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. எனவே அதிகாரிகளை அழைத்து 2 ஏரிகளிலும் என்ன செய்யலாம் என்று கேட்டேன். அவர்கள், ஏரிகளின் கரைகளை பலப்படுத்தி, ஏரிக்குள் செயற்கை தீவுகளை ஏற்படுத்தி பொழுது போக்குவதற்கான உல்லாச படகுகளை விடலாம் என்றார்கள்.

மேலும் கரைகளில் சிமென்ட் தளம் அமைத்தால் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்யவும் பயன்படும். இதற்கெல்லாம் ₹25 கோடி ஆகும் என்றார்கள். இந்த நிதியை நான் ஒதுக்கித்தருகிறேன். உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கூறி உத்தரவிட்டுள்ளேன். அடுத்த ஆண்டு கழிஞ்சூர், காட்பாடி ஏரிகளில் படகுகள் மிதக்கும். இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக நிகழ்ச்சிக்கு பகுதி திமுக செயலாளர் சுனில்குமார் தலைமை தாங்கினார். எம்பி கதிர்ஆனந்த், மாநகர திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான கார்த்திகேயன் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரப்பிரிவு செயற்பொறியாளர் ரமேஷ், தாசில்தார் ஜெகதீஸ்வரன், மாநகராட்சி மண்டல உதவி ஆணையர் ெசந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பெயருக்கு நடந்த குடிமராமத்து பணி
கடந்த ஆட்சியின்போது மாநிலம் முழுவதும் உள்ள ஏரிகள், குளங்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டதாக கூறப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் சதுப்பேரி, கழிஞ்சூர், தாராபடவேடு, செதுவாலை, நெல்லூர்பேட்டை உட்பட பல ஏரிகள் இத்திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இந்த ஏரிகளில் கரைகளை மட்டும் செடி, கொடிகளை அகற்றி மண்ணை மேல்நோக்கி தள்ளியுள்ளனர்.

ஏரியின் நீர்த்தேக்க பகுதிகளில் முழுவதுமாக முள்வேலி மரங்களும், செடி, கொடிகளும் மண்டி காணப்படுகின்றன. அதேபோல் கால்வாய்களிலும் புதர்கள் மண்டியுள்ளன. அதேநேரத்தில் ஊரகப்பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 20ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் நீர்வரத்துக்கால்வாய்கள், கானாறுகளை சீரமைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் நீர்வரத்துக்கால்வாய்கள் மட்டும் சீரமைக்கப்பட்டன. அதன் காரணமாக கழிஞ்சூர், தாராபடவேடு ஏரிகளுக்கு திருப்பிவிடப்பட்ட  பாலாற்று நீர் வந்து  சேர்ந்துள்ளது. அதேநேரத்தில் சதுப்பேரி உட்பட பல ஏரிகளுக்கு குறைந்த அளவே தண்ணீர் சென்று கொண்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சுருங்கிப்போன நீர்வரத்துக்கால்வாய்
கழிஞ்சூர் ஏரி நிரம்பி தாராபடவேடு ஏரிக்கு உபரிநீரை கொண்டு செல்லும் கால்வாய் கரையோரம் மாநகராட்சி குப்பைகள் குவித்து வைக்கப்படுகிறது. அதேபோல் கால்வாய் கரையோரம் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் நேரடியாக கால்வாயில் கலக்கும் வகையில் பைப்கள் புதைக்கப்பட்டுள்ளன. இதில் மனிதகழிவுகளை கொண்டு வரும் பைப்புகளும் அடக்கம். கழிஞ்சூர் ஏரி மட்டுமின்றி ஏறத்தாழ மாவட்டம் முழுவதும் உள்ள நீர்வரத்துக்கால்வாய்களும் அதே நிலையில்தான் உள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக நீர்வரத்துக்கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் கலக்காத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Katpadi Kalinchur lake ,Minister ,Duraimurugan , 25 crore artificial island on Katpadi Kalinchur Lake, arranged for pleasure boat ride: Minister Duraimurugan Information
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...