×

கவுரவ டாக்டர் பட்டம் பெற்றும் எரியூட்டும் பணியை செய்யும் எம்எஸ்சி பட்டதாரி இளைஞர்

மானாமதுரை: குடும்ப வறுமையால் மயான பணியில் ஈடுபட்டு வரும், கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற பட்டதாரிக்கு, அரசு பணி வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, ரயில்வே காலனியை சேர்ந்தவர் கருத்தகாளை (எ) முருகேசன். இவர் மனைவி பஞ்சவர்ணத்துடன் கடந்த 30 ஆண்டுகளாக மானாமதுரையில் மயானங்களில் பிணங்களை எரியூட்டும் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். கடைசி மகன் சங்கரை தவிர மற்ற 4 பேரும் வெளியே கூலி வேலை பார்த்து வருகின்றனர்.வறுமையான குடும்ப சூழலிலும் சங்கர், தந்தைக்கு உதவியாக மயான தொழிலுக்கு சென்று கொண்டே எம்எஸ்சி பட்ட மேற்படிப்பு முடித்துள்ளார். திருமணமாகி மனைவி, ஒரு பெண் குழந்தை உள்ளனர். கொரோனா காலக்கட்டத்தில் இறந்த பிணங்களை எரியூட்டவும், இறுதி சடங்குகளை செய்யவும் உதவிகரமாக இருந்தார். இச்சேவையை பாராட்டி சென்னையை சேர்ந்த சர்வதேச தமிழ் பல்கலைக்கழக அமைப்பு இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

சங்கர் கூறுகையில், ‘‘அரசு கல்லூரியில் பல்வேறு சிரமங்களுக்கு இடையே எம்எஸ்சி வேதியியல் பட்டம் பெற்றேன். பிணங்களை எரியூட்டும் வேலை இல்லாத நாட்களில், தனியார் பள்ளியில் தற்காலிக ஓவிய ஆசிரியராகவும் உள்ளேன். குறைந்த சம்பளமே பெற்று வருவதால், பட்டமேற்படிப்பு படித்தும் பிணங்களை எரியூட்டும் வேலையை செய்ய வேண்டியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் எந்த உதவியும் கிடைக்கவில்லை. திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில், எனக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மனிதாபிமான அடிப்படையில் ஏதாவது ஒரு அரசு பணி வழங்கினால் குடும்ப வறுமையில் இருந்து மீண்டு விடுவேன்’’ என்றார்.


Tags : MSc , Honorary Doctor degree will do the burning job MSc graduate youth
× RELATED அரியலூர் மாவட்டத்தில் வேளாண்...