கொள்ளளவு 63 ஆண்டில் 17% குறைந்துள்ளது தூர்வாரப்படுகிறது வைகை அணை: ஐகோர்ட் கிளையில் பொதுப்பணித்துறை தகவல்

மதுரை: வைகை அணையின் கொள்ளளவு கடந்த 63 ஆண்டில் 17 சதவீதம் குறைந்துள்ளது. இவை தூர்வாரி பழைய இயல்பு நிலைக்கு கொண்டுவரப்படும் என பொதுப்பணித்துறை தரப்பில் ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம், மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தேனி மாவட்டத்திலுள்ள வைகை அணை 1958ல் கட்டப்பட்டது முதல் தற்போது வரை தூர்வாரவில்லை. இதனால் சுமார் 20 அடி வரை மணல் தேங்கி, தண்ணீர் தேக்கும் கொள்ளளவு குறைந்துள்ளது. வைகை பாசனத்தை நம்பி தான் மதுரை, தேனி திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட விவசாயமும், குடிநீர் தேவையும் உள்ளன. அணைக்கு நீர்வரத்து பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. பல இடங்களில் மோட்டார்கள் மூலம் தண்ணீர் திருடப்படுகிறது. நகர்பகுதிகளில் அதிகளவு கழிவுநீர் கலப்பதால் வைகை நீர் மாசடைகிறது. இதுபோன்ற காரணங்களால் தென்மாவட்டங்களில் விவசாயம் பெரிதும் பாதித்துள்ளது. எனவே, வைகை அணையை முழுமையாக தூர்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தண்ணீர் திருட்டை தடுத்து முழுமையாக கண்காணிக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி எம்.துரைச்சுவாமி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. பெரியாறு - வைகை பாசன கோட்ட நீர்வள ஆதார அமைப்பின் கண்காணிப்பு பொறியாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், ‘‘வைகை அணை ஆயக்கட்டின் மூலம் 3,55,950 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையை தூர்வாருவது குறித்து வாப்கோஸ் நிறுவனம் கடந்த 2014ல் ஆய்வுகளை மேற்கொண்டது. 33.481 மில்லியன் கியூபிக் மீட்டருக்கு தூர்வார வேண்டியுள்ளது. திட்ட அறிக்கைக்கு தொழில்நுட்ப ஆலோசனைக்குழு ஒப்புதல் தந்துள்ளது.  நீரில் அடித்து வரப்பட்ட கல் மற்றும் மண் ஆகியவை படிந்துள்ளதால் 194.78 மில்லியன் கியூபிக் மீட்டர் கொள்ளளவுள்ள வைகை அணையில், கடந்த 63 ஆண்டுகளில் 33.481 மில்லியன் கியூபிக் மீட்டர் கொள்ளளவு குறைந்துள்ளது.இது மொத்த அளவில் 17 சதவீதம் ஆகும். 3 கட்டமாக தூர்வாரும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டது. ஒட்டுமொத்தமாக ரூ.197.83 கோடி மதிப்பீட்டில், முதல்கட்ட பணியை ரூ.9 கோடி மதிப்பீட்டில் 3 ஆண்டுகளில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் நிரந்தர ஆக்கிரமிப்புகள் இல்லை. இதனால் 71 அடிக்கு தேக்குவதில் எந்த பிரச்னையும் இல்லை. வைகை அணையின் பரப்பளவு அளவீடு செய்து, எல்லைக்கல் ஊன்றுவது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். பல்வேறு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. நீர் வரத்து பகுதியில் அளவீடு செய்து 1,090 எல்லை கற்கள் நடப்பட்டுள்ளன. சில பகுதிகளில் ஆக்கிரமிப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும். ஆற்றுக்குள் கழிவு நீர் கலப்போரின் கழிவு நீர் குழாய் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வைகை, மேட்டூர், அமராவதி, பேச்சிப்பாறை, குண்டாறு, வெலிங்டன் ராமநதி மற்றும் காவேரிபாக்கம் ஏரி ஆகியவற்றை தூர்வாரி பழைய இயல்பு நிலைக்கு கொண்டு வருவது குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டிருந்தது.இதையடுத்து மனு மீதான விசாரணையை அக். 20க்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories:

More
>