×

பூக்குளம் கிராமத்தில் மூலிகை செடிகள்,தொன்மையான மரங்களுடன் குறுங்காடு அமைப்பு

சாயல்குடி:  பூக்குளம்  கிராமத்தில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் முலிகை செடிகள், மருத்துவம்  குணம் வாய்ந்த மரங்கள், தொன்மையான மரக்கன்றுகள் நடப்பட்டது. ராமநாதபுரம்  மாவட்டத்தில் பருவமழை துவங்க உள்ளதால் பஞ்சாயத்துகளிலுள்ள நீர்நிலைகளில்  மரக்கன்றுகள், பனை மரம் விதைகள் நடுவதற்கு கலெக்டர் சந்திரகலா  உத்திரவிட்டுள்ளார், கூடுதல் ஆட்சியரும், திட்ட இயக்குனருமான  பிரவின்குமார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் கேசவதாசன் வழிகாட்டுதலின்படி  கடலாடி ஒன்றியம், இளஞ்செம்பூர் பஞ்சாயத்திலுள்ள பூக்குளம் கிராமத்தில்  குறுங்காடுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக கண்மாய்  கரையோரம் இருந்த காலியிடம் 100நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாளர்களின்  பங்களிப்போடு சீரமைக்கப்பட்டு 4 மீட்டர் அகலம், 125 மீட்டர் நீளத்தில்  நிலம் உழவாரப்பட்டு, செம்மண், கரப்பை மண்,இயற்கை உரம் போன்றவற்றை இட்டு,  சுற்றி வேலி அமைக்கப்பட்டது. இதில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.  வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல்ஜாமியா தலைமை வகித்தார். பஞ்சாயத்து தலைவர்  பொற்கொடி காயம்பு முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்  அசோக்குமார் வரவேற்றார்.

இந்த குறுங்காட்டில் மருத்துவ குணம் வாய்ந்த,  மிகவும் தொன்மையான மரங்களான செப்தோடிய மரம், மகாகனி, இலுப்பை, சொர்க்கம்,  ஆவி, மயில், மஞ்சள், நீர் மருது, கருமருது, சரக் கொன்றை உள்ளிட்ட கொன்றை   மரங்கள். உதிரம், மகிழம், மலைவேம்பு, வில்வம் உள்ளிட்ட மரங்கள் நடப்பட்டது.  மேலும் தூதுவளை, தும்பை, சிறியநங்கை, ஓமவள்ளி, கண்டங்கத்திரி,  வல்லாரை, நாராயண சஞ்சீவி, கீழாநெல்லி உள்ளிட்ட மூலிகை செடிகள் மற்றும்  மா,கொய்யா, வாழை, சவுக்கு, தேக்கு. வேம்பு, பன்னீர், பாதாம், இயல்வாகை,  பூவரசு, ஆலமரம், அத்திமரம், நாவல், கொடுக்காப்புளி பொன்மூங்கில் உள்ளிட்ட  50க்கும் மேற்பட்ட வகைகளை சேர்ந்த மரங்கள், செடிகள் நடப்பட்டது. இது  குறித்து பஞ்சாயத்து தலைவர் பொற்கொடி கூறுகையில், ‘‘வரவலாற்றில் இடம் பெற்ற  தொன்மையான மரங்கள் பலவற்றை இன்றைய தலைமுறையினர் பார்த்தது கிடையாது.  

இதனால் தொன்மையை அறிந்து கொள்வதற்கும், மருத்துவம் குணம் வாய்ந்த மரங்கள்,  மூலிகை செடிகளை புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களின் பல்வேறு இடங்களில்  வாங்கி வந்து, நட்டு முறையாக பராமரித்து வருகிறோம். 500க்கும் மேற்பட்ட  செடி, கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதனை கண்காணித்து வளர்ப்பதற்கு 5 கன்றிற்கு  ஒருவர் வீதம் 500 கன்றுகளுக்கும் நூறு நாள் பணியாளர்  நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே முறையாக வளர்க்கப்படும். ஆடு உள்ளிட்ட  கால்நடைகளிலிருந்து காப்பதற்கு காவலரும் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார். இந்த  மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் துணை தலைவர் மலர்செல்வி சேது, ஒன்றிய பணி  மேற்பார்வையாளர் நாகேஸ்வரன், கிராம நிர்வாக பாபு, ஊராட்சி செயலர்கள்  ராமமாரி, திருமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Pookulam village , Shrub system with herbaceous plants and ancient trees in Pookkulam village
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...