க.பரமத்தி அருகே விசுவநாதபுரியில் சமூகத்தினர் வைத்த போர்டில் பெயரை அழித்ததை கண்டித்து மக்கள் சாலை மறியல்: போலீசார் சமரசம்

க.பரமத்தி: க பரமத்தி அடுத்த விசுவநாதபுரிபிரிவில் அரசு பெயர் பலகைக்கு பதிலாக ஒரு சமூகத்தினர் வைத்த பெயர் பலகை போர்டு மீது சாலைப் பணியாளர் பெயிண்ட் அடித்து அழித்ததால் பலரும் திரண்டு சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

கரூர் மாவட்டம் கரூர் சின்னதாராபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் விசுவநாதபுரி பிரிவு உள்ளது. இங்கு ஒரு சமூகத்தினர் பெயர் பலகையும் அதன் அருகே கொடிக் கம்பமும் வைத்துள்ளனர்.நேற்று பணிக்கு வந்த சாலைப் பணியாளர் ஒருவர் அந்த பகுதியில் இருந்த ஒரு சமுதாயத்தினர் பெயர் பலகையில் உள்ள எழுத்துக்களை பெயிண்ட் மூலம் அடித்து அழித்துள்ளார். இதனை பார்த்த இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பணியாளர் ஒருவர் பெண் அதிகாரி அளிக்க சொன்னதாக கூறியுள்ளார்.

அப்பகுதி இளைஞர்கள் நெடுஞ்சாலை ஆய்வாளரை தொடர்பு கொண்டு கேட்டதாகவும், நான் தான் அழிக்கச் சொன்னேன் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. மற்ற சமூகத்தினர் பெயர் பலகை அப்பகுதியில் சிறிது தூரம் தள்ளி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் எங்களது பெயர் பலகையை மட்டும் பெயிண்ட் அடித்து மறைக்க வேண்டிய காரணம் என்ன, யாரின் தூண்டுதலில் பெயரில் இந்த நடவடிக்கை எனக் கூறி அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து அப்பகுதி சாலையின் குறுக்கே இரு சக்கர வாகனங்களை மறித்து நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த டிஎஸ்பி தேவராஜன், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பலரும் பலவித புகார்களை தெரிவித்தனர்.

இதன் பின்பு பெயிண்ட் அடிக்க சொன்ன நெடுஞ்சாலை ஆய்வாளரை கேட்டபோது தனக்கு கீழ் பணியாற்றும் சாலைப் பணியாளர் தவறுதலாக பெயர் பலகையை மாற்றி பெயிண்ட் அடித்ததாகவும் மீண்டும் சீரமைக்க தேவையான நடவடிக்கையினை எடுப்பதாக கூறினார்.அப்போது, இளைஞர்களுக்கும் நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து சமரசம் செய்த போலீசார் நெடுஞ்சாலை துறை அதிகாரி மற்றும் சாலைப் பணியாளரை க.பரமத்தி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைப்பதாக கூறி அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை துறை அதிகாரியின் அலட்சியத்தாலும், அனுபவம் வாய்ந்த பணியாளரின் கவனக் குறைவால் அப்பகுதியில் பொதுமக்கள் பலரும் திரண்டதால் சுமார் 3 மணி நேரம் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.

Related Stories:

More
>