×

அறந்தாங்கி எல்.என்.புரம் பகுதியில் அதிமுக ஆட்சியில் ஆழ்துளை கிணறு அமைத்து 6 மாதமாகியும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாத நிலை: ரூ.23 லட்சம் மக்களின் வரிப்பணம் வீண்

அறந்தாங்கி: அறந்தாங்கி எல்.என்.புரம் பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறை பயன்பாட்டிற்கு கொண்டு வராததால், மக்களின் வரிப்பணம் ரூ.23 லட்சம் வீணாகி வருகிறது.அறந்தாங்கி நகரில் நாடிமுத்து, பெரியார், வீரமாகாளியம்மன், கோபாலசமுத்திரம், எல்.என்.புரம் போன்ற இடங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் எல்.என்.புரம் நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் தண்ணீர் வழங்கும் ஆழ்துளை கிணற்றில் இருந்து கிடைக்கும் தண்ணீரின் அளவு குறைந்துகொண்டே வந்ததால், அறந்தாங்கி நகராட்சி சார்பில் எல்.என்.புரத்தில் இருந்து வாராப்பூர் செல்லும் வழியில் 15வது நிதிக்குழு திட்டத்தில் கடந்த மார்ச் மாதம் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆழ்துளை கிணற்றிற்கு மின் இணைப்பும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் 1000 அடி ஆழத்தில் அமைக்கப்பட்ட இந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து எல்.என்.புரம் நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் புதிய பைப் லைன் அமைக்கப்படாததால், அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம் ஆழ்துளை கிணற்றில் நீர் உறிஞ்சும் மோட்டார் இறக்கி, ஆழ்துளை கிணற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. 6 மாதங்கள் ஆன நிலையில் அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதததால், மக்களின் வரிப்பணம் ரூ.23 லட்சம் வீணாகி வருவதோடு, மக்களுக்கும் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து எல்.என்.புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறியது: அறந்தாங்கி நகரம் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நகராக இன்று விளங்குவதற்கு முன்னாள் திமுக சேர்மன் ஜனார்த்தனம்தான் காரணம். அவரது தொலைநோக்கு பார்வையோடு அறந்தாங்கி நகரில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள் இன்றும் நகர மக்களுக்கு தாராளமாக குடிநீர் வழங்கி வருகின்றன. நீண்ட காலத்திற்கு ஆழ்துளை பயன்படுத்தப்படாமல் இருந்தால், ஆழ்துளை கிணற்றில் பொறுத்தப்பட்டுள்ள பைப்புகள் அடைப்பட்டு, பைப்பிற்குள் தண்ணீர் வராத நிலை ஏற்பட்டு, ஆழ்துளை கிணறு பாழடையும் நிலையும் உள்ளது. எனவே அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம் உடனடியாக அறந்தாங்கி எல்.என்.புரம் வாராப்பூர் சாலையில் அமைத்துள்ள புதிய ஆழ்துளை கிணற்றை உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.அறந்தாங்கி நகராட்சி அதிகாரிகள் உடனடியாக எல்.என்.புரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

Tags : AIADMK ,Aranthangi LN Puram , It has been 6 months since the AIADMK government dug a deep well in Aranthangi LN Puram area Non-utilization: Rs 23 lakh people's tax money wasted
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...