×

வக்ஃப் வாரிய சொத்துகள் பொதுச்சொத்துகள் என்பதால் பத்திரப் பதிவு மேற்கொள்ளக்கூடாது : தமிழ்நாடு அரசு அதிரடி

சென்னை : வக்ஃப் வாரிய சொத்துகள் பொதுச்சொத்துகள் என்பதால் பத்திரப் பதிவு மேற்கொள்ளக்கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் முதன்மை செயலர் திரு. ஏ. கார்த்திக் இ.அ.ப.  பதிவுத் துறைத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டில் 7,452 வக்ஃப் நிறுவனங்களுக்கு சொந்தமான 53,834 சொத்துகள் உள்ளன. இச்சொத்துகளில் அதிகமானவை ஆக்கிரமிப்பில் உள்ளன அல்லது சட்டவிரோதமாக வகை மாற்றும் செய்யப்பட்டுள்ளன.

வக்ஃப் நிறுவனங்களின் வசம் உள்ள சில சொத்துகளின் பட்டாக்கள் மூன்றாம் நபர் பெயரில் உள்ளன. வக்ஃப் சட்டம் 1995ன் பிரிவு 51 (1ஏ) வை பிரிவு 104ஏ உடன் சேர்ந்து பார்க்கும் போது வக்ப் சொத்தை விற்பது அன்பளிப்பாக அளிப்பது அல்லது பரிமாற்றம் செய்வது, அடமானம் வைப்பது அல்லது பெயர் மாற்றம் செய்வது அப்பரிவர்த்தனையின் தொடக்கத்திலிருந்தே செல்லதக்கது அல்ல. வக்ஃப் சட்டத்தின் 40ம் பிரிவின் படி ஒரு சொத்து வக்ஃப் சொத்தா இல்லைய என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் வக்ஃப் வாரியத்திற்கே உண்டு.

மேலும் பொது சொத்துகள் சட்டம் 1975ன் படி வக்ஃப் சொத்துகள் பொது சொத்துகள் என்று பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. பதிவு சட்டம் 1908ன் படி வக்ஃப் சொத்துகள் விற்பனையை பதிவு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. வக்ஃப் ஆய்வாளர்களும், வக்ஃப் கண்காணிப்பாளர்களும் அளிக்கும் தடையில்லா சான்றிதழ் (என்ஒசி) அடிப்படையில் வக்ஃப் சொத்துகள் வகை மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன என்பது அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே என்ஒசி அடிப்படையில் விற்பனை பதிவிற்காக வரும் எந்தவொரு வக்ஃப் சொத்து தொடர்பான பத்திரத்தையும் பதிவு செய்ய வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Waqf Board ,Government , வக்ஃப் வாரிய சொத்துகள்
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...