வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுக்காக 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியாது!: தவறுகளை திருத்த தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுக்காக 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுக்கா இச்சிபுத்தூர் கிராமத்தில் உள்ள 8 வது வார்டில் வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்தி புது வாக்காளர் பட்டியல் வெளியிடும் வரை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என்று கூறி அந்த வார்டை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம் 8வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் மற்ற வார்டில் உள்ள பெண்கள், இறந்தவர்கள் பெயர்கள் என 120 பேரின் பெயர்கள் தங்களது வார்டில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை திருத்தாமல் தேர்தல் நடத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும்  மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தொடர்ந்து, அக்டோபர் 6ம் தேதி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்த நீதிபதிகள்,  வாக்காளர் பட்டியலில் பெயர்கள் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது என்ற காரணத்திற்காக 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது என்று மறுப்பு தெரிவித்தனர். மேலும் வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Related Stories:

More
>