×

வடசென்னை அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு!: 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!!

திருவள்ளூர்: வடசென்னை அனல்மின் நிலையத்தின் 1வது நிலை நிலக்கரியை துகளாக்கும் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதலாவது நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும், 2வது நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் மின் உற்பத்தி என நாள்தோறும் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வடசென்னை அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி ஒரிசாவிலுள்ள மகாநதி நிலக்கரி களம் மற்றும் மேற்கு வங்கம், ராணிகெஞ்ச்-ல் உள்ள கிழக்கத்திய நிலக்கரி களம் ஆகியவற்றில் இருந்து கொண்டு வரப்படுகிறது.  

இந்நிலையில் வடசென்னை அனல்மின் நிலையத்தின் 1வது நிலையில் 3வது அலகில் நிலக்கரி துகளாக்கும் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் மின் உற்பத்தி தொடங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Tags : Vadchennya Analm Station , North Chennai Thermal Power Station, technical malfunction
× RELATED வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு