×

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்  கோயிலுக்கு சொந்தமான பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ரூ.300 கோடி மதிப்பிலான  49 கிரவுண்ட் நிலம் இந்து சமய அறநிலையத்துறையினால் மீட்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அமைந்துள்ள கட்டிடத்தை தொன்மை மாறாமல், வேறு பயன்பாட்டிற்கு கொண்டுவர தனியார் நிறுவனத்திடம் ஆய்வுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர்களிடம் இருந்து முழு அறிக்கையும் பெற்ற பிறகு அந்த கட்டிடத்தை மாற்று பயன்பாட்டிற்கு ஏற்படுத்துவதா, அல்லது அந்த கட்டிடத்தின் சிறத்தன்மை குன்றியிருந்தால் அதனை அகற்றுவது பற்றி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். அந்த இடத்தை பொறுத்தவரையில் அது சுமார் 98 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுக்கப்பட்ட இடம். அந்த குத்தகை தாரர் இறந்த பிறகு அவருடைய வாரிசுகள் அதனை தபால்த்துறைக்கு வாடகைக்கு விட்டிருந்தனர்.

இதன் மூலம் பெறப்பட்ட வாடகை பணத்தை அவர்கள் எடுத்து கொண்டனரே தவிர சம்பந்தபட்ட திருக்கோவிலுக்கு அவர்கள் எதுவும் செய்யவில்லை. அந்த வகையில் ரூ.12 கோடிக்கு மேல் வாடகை நிலுவைத்தொகை உள்ளது. அதனை வசூலிக்கவும் முறையாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். வாடகை பாக்கியை பெறுவதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளையும் இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும் என அமைச்சர் கூறினார்.

இந்து சமய அறநிலையத்துறையை பொறுத்த வரையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் இறை சொத்து இறைவனுக்கே என்னும் தாரக மந்திரத்தோடு, இது போன்ற ஆக்கிரமிப்புகளில் உள்ள நிலங்களை தினந்தோறும் மீட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து 4 நாட்களாக மதுரவாயல், மயிலாப்பூர், திருப்பூருர் உள்ளிட்ட இடங்களில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சுமார் 40 கோடிக்கு மேலான சொத்துக்களை சட்டத்தின் மூலம்  மீட்கப்பட்டுள்ளது.  

அந்தவகையில் சட்டமன்ற மானிய கோரிக்கைகளில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு இந்து சமய அறநிலையத்துறை சொத்துக்கள் மீட்கப்படும் என அறிவிக்கபட்டிருந்தது. அதன்படி இன்றைக்கு துறை சார்ந்த செயலாளர், ஆணையாளர், இணை ஆணையாளர் உதவியோடு மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு ரூ.1000 கோடியை தாண்டிவிட்டது.

இந்து சமய அறநிலையத்துறை கணக்கின்படி இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் ஆன்மிகம் என்ற பெயரில் ஊடுருவ நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.


Tags : Ekambaranathar temple ,Kanchipuram ,Minister ,Sekarbabu , Kanchipuram, Ekambaranathar Temple, Land, Minister Sekarbapu
× RELATED பாமக திடீர் ஆர்ப்பாட்டம்