×

இளைஞர்கள் அதிகளவில் அரசியலில் சேர்ந்து தரமான மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தல்

டெல்லி : இளைஞர்கள் அதிகளவில் அரசியலில் சேர வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர்  வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். இளைஞர்கள் தங்கள் ஆற்றல் மற்றும் இலட்சியங்கள் மூலம் தரமான மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.ஜோத்பூர் ஐஐடியில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்துக்கு குடியரசுத் துணைத் தலைவர் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

வேளாண், சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் நடைமுறை செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கொண்டு வர வேண்டும். செயற்கை நுண்ணறிவு போன்ற புரட்சிகரமான தொழில்நுட்பத்தின் பயன்கள் மக்களைச் சென்றடைந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும்.சுகாதாரத்துறையில் தொலைதூரத்திலிருந்தே பரிசோதனைகளை  மேற்கொள்ளும் வகையிலும், ஆங்கில உரைகளை இந்திய மொழிகளில் தானாக மொழி பெயர்க்ககூடிய வகையிலும், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஸ்மார்ட் தீர்வுகளை ஆராய வேண்டும்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சேவைகளை விரைவாக வழங்குவதற்கான சாத்தியங்களை அரசுத் துறைகள் ஆராய வேண்டும். ஜன்தன் கணக்குகளில் நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் மக்களுக்குப் பயன்கள் முழுவதுமாகக் கிடைத்தன.2035ம் ஆண்டுக்குள், இந்தியப் பொருளாதாரத்தில் 957 பில்லியன் அமெரிக்க டாலர், அல்லது இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய மொத்த மதிப்பில் 15 சதவீதத்தை  சேர்க்கும் ஆற்றல் செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு உள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் வழக்கமான பல தொழில்களை மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. அதற்கேற்ப இளைஞர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

8 மாநிலங்களில் உள்ள 14 பொறியியல் கல்லூரிகள் மாநில மொழிகளில் பட்டப்படிப்புகளை வழங்க சமீபத்தில் முடிவு எடுத்துள்ளது பாராட்டத்தக்கது. அதே போல் தொழில்கல்வி இன்னும் அதிகளவில் பிராந்திய மொழிகளில் வர வேண்டும்.இளைஞர்கள் அதிக அளவில் அரசியலில் சேர வேண்டும். இளைஞர்கள் தங்களின் ஆற்றல் மற்றும் இலட்சியங்கள் மூலம் இந்திய அரசியலில் தரமான மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.இவ்வாறு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசினார்.



Tags : Vice President ,Venkaiah Naidu , இளைஞர்கள்,குடியரசுத் துணைத் தலைவர் ,வெங்கையா நாயுடு
× RELATED பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள சசிகலா...