×

ஈக்வெடார் சிறைக்குள் பயங்கர ஆயுதங்களுடன் கைதிகள் மோதல்!: வன்முறையை தடுக்க போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 24 கைதிகள் உயிரிழப்பு..!!

குயிட்டோ: ஈக்வெடார் நாட்டில் உள்ள சிறை ஒன்றில் இரு தரப்பினருக்கு இடையே நடந்த பயங்கர மோதலில் 24 பேர் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தென் அமெரிக்க நாடான ஈக்வெடாரின் குவாயாகுயில் என்ற நகரத்தில் மத்திய சிறை செயல்பட்டு வருகிறது. இங்கு போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தவிர கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் சிறை கைதிகளில் இரு பிரிவினரிடையே நேற்று பயங்கர மோதல் ஏற்பட்டது.

கையில் கிடைத்த கம்பிகள், கற்கள், கத்திகளை கொண்டு இரு பிரிவினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். அவர்களை கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அதை தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதால் சிறை வளாகமே போர்க்களமாக மாறியது. சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு சிறைக்குள் ஏற்பட்ட வன்முறையை காவலர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த பயங்கர மோதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 24 கைதிகள் உயிரிழந்திருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

லாஸ் லோஃபஸ் மற்றும் லாஸ் கோர்னினோஸ் ஆகிய கைதி குழுக்களிடையே ஏற்பட்ட திடீர் மோதலே வன்குறைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. வன்முறையில் காயமடைந்திருக்கும் 48 கைதிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறையில் மீண்டும் மோதல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


Tags : Ecuador , Ecuadorian prison, prisoner clash, shooting
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...