வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராக லஞ்ச ஒழிப்பு துறை சம்மன்

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் நாளை ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறை சம்மன் அனுப்பப்பியுள்ளது. கரூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு ஆண்டாங்கோயில் சரஸ்வதி நகரில் உள்ளது. இவரின் சாயப்பட்டறை மற்றும் அலுவலகங்கள் செல்வம் நகரில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை 22ம்தேதி காலை 7மணியளவில் சரஸ்வதி நகரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, செல்வம் நகரில் உள்ள சாயப்பட்டறை மற்றும் அவருக்கு சொந்தமான 3அலுவலகங்கள் உள்பட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தனித்தனி குழுக்களாக சென்று சோதனையிட்டனர்.  

மேலும், சென்னையில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். அதில், முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.25 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கில் நாளை சென்னை ஆலந்தூர் அலுவலகம் அல்லது கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Related Stories: