×

கேளம்பாக்கம் அருகே, மும்முரமாக நடக்கும் ஓஎம்ஆர் புறவழிச்சாலைப்பணி: விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு

திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே, மும்முரமாக நடக்கும் ஓஎம்ஆர் புறவழிச்சாலைப்பணி விரைவில் முடிவடைந்து, 2 மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. பழைய மாமல்லபுரம் சாலை எனப்படும் ராஜிவ் காந்தி சாலை, சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை 6 வழிப்பாதையாக உள்ளது. சிறுசேரியில் இருந்து பூஞ்சேரி வரை 4 வழிப்பாதையாக உள்ளது. இந்த சாலையில் படூர், கேளம்பாக்கம் பகுதியிலும், திருப்போரூர் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

இதையடுத்து, படூர் - தையூர் இடையே ஒரு புறவழிச்சாலையும், திருப்போரூர் - ஆலத்தூர் இடையே ஒரு புறவழிச்சாலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. படூர் - தையூர் இடையே புறவழிச்சாலை 4.67 கிமீ தூரமும்,  திருப்போரூர் - ஆலத்தூர் இடையே புறவழிச்சாலை 7.45 கிமீ தூரமும் அமைக்கப்படுகிறது. இந்த 2 புறவழிச்சாலைகளுக்கும் சேர்த்து மொத்த திட்ட செலவாக ரூ.465 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு இந்த சாலையை அமைக்க படூர், கழிப்பட்டூர், கேளம்பாக்கம், தையூர், காலவாக்கம், கண்ணகப்பட்டு, திருப்போரூர், தண்டலம், ஆலத்தூர், வெங்களேரி உள்பட 13 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டன.

முதற்கட்டமாக படூர், கேளம்பாக்கம் பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இச்சாலையின் குறுக்கே கேளம்பாக்கம் - கோவளம் சாலை வருவதால் அங்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. பாலப்பணிகள் முடிந்த நிலையில் புறவழிச்சாலை அந்த பாலத்துடன் இணைக்கவில்லை. அதேபோல் கேளம்பாக்கத்தில் இருந்து தையூர் வரை இன்னும் புறவழிச்சாலை பணிகள் தொடங்கிய நிலையிலேயே உள்ளது. பணிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு புறவழிச் சாலை, ஓஎம்ஆர் சாலையுடன் தையூர் - செங்கண்மால் பகுதியில் இணைக்க வேண்டும். இதனால் 75 சதவீத சாலைப்பணிகள் முடிந்தும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து கடந்த பிப்ரவரியில், தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. ஆனால், சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் திமுக ஆட்சி ஏற்பட்டதும் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டு பாதியில் நிற்கும் சாலை மற்றும் பாலப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஓஎம்ஆர் சாலையில் படூர் மற்றும் கேளம்பாக்கம் இடையிலான புறவழிச்சாலைப் பணியும் அதற்காக கோவளம் சாலையில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலப் பணியினையும் விரைந்து முடிக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்பேரில் தற்போது புறவழிச்சாலையுடன் மேம்பாலத்தை இணைக்கும் பணிகள் தொடங்கி நடக்கின்றன. இன்னும் 2 மாதங்களில் இப்பணிகள் முடிவுற்று ஓஎம்ஆர் சாலையில் முதற்கட்ட புறவழிச்சாலைகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும். அடுத்த கட்டமாக காலவாக்கம், திருப்போரூர் பகுதியில் அமைக்கப்படும் புறவழிச்சாலை பணிகள் தொடங்கும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Kalambakkam , Busy OMR bypass near Kelambakkam: Coming soon for public use
× RELATED கிளாம்பாக்கம் பேருந்து முனைய...