கார் மோதி 2 பெண்கள் பலி: 8 பேர் படுகாயம்; கல்லூரி மாணவன் கைது

சென்னை: வில்லிவாக்கம் 200 அடி சாலையில் தறிகெட்டு ஓடிய கார் மோதியதில். தடுப்புச்சுவருக்கு வர்ணம் பூசிக்கொண்டிருந்த 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். சிறுவன் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். இதுெதாடர்பாக இன்ஜினியரிங் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை பெரம்பூர் சிவகாமி தெருவை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். மலேசியாவில் வேலை செய்கிறார். இவரது மகன் சுஜித் (19). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கிறார். நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் சுஜித், தனது நண்பர்கள் 3 பேருடன், கிழக்கு கடற்கரை சாலையில், சூரியன் உதயத்தை பார்க்க காரில் புறப்பட்டார். இதையொட்டி, வில்லிவாக்கம் 200 அடி சாலை தாதான்குப்பம் ரயில்வே மேம்பாலம் பகுதியில், காரில் அசுர வேகத்தில் சென்றார்.

அப்போது, அங்கு தடுப்புச்சுவருக்கு வர்ணம் பூசும் பணியில், 10 வயது சிறுவன் உட்பட, 9 பேர் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில், சுஜித்தின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி, தடுப்புச்சுவருக்கு வர்ணம் பூசி கொண்டிருந்தவர்கள் மீது, பயங்கரமாக மோதியது. இதில், படுகாயமடைந்த சுஜித் மற்றும் 9 பேரும் ரத்தவெள்ளத்தில் அங்கேயே மயங்கினர். தகவலறிந்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் அரி தலைமையில் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி, 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஷகிலா(27), மலர் (33), ராதா(32), அம்சவள்ளி (40), காமாட்சி (25), மூர்த்தி (30), சத்யா (26), முருகேசன் (30), கவுதம் (10) ஆகியோர் தடுப்பு சுவருக்கு வர்ணம் பூசி கொண்டிருந்தனர். அப்போது, ரெட்டேரியில் இருந்து பாடி நோக்கி வேகமாக வந்த கார், அவர்கள்  மீது, பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளனது. அதில் ஷகிலா (27), காமாட்சி (25) ஆகியோர் இறந்தனர் என தெரிந்தது. இதையடுத்து போலீசார், சுஜித்தை கைது செய்தனர்.

Related Stories:

More
>