நிர்வாக நிதியில் பல லட்சம் முறைகேடு: ஒன்றியக்குழு பெண் தலைவர் மீது புகார்

திருவள்ளூர்: பள்ளிப்பட்டு அதிமுக ஒன்றியக்குழு தலைவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பல லட்சம் முறைகேடு செய்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட 9  பேர் திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் தலைமையில் மாவட்ட திட்ட இயக்குனரிடம் புகார் அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக பதவி வகிப்பவர் அதிமுகவை சேர்ந்த ஜான்சிராணி. இவர் பதவியேற்ற நாள் முதல் ஒன்றிய நிதியில் பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதாகவும், கொரோனா காலத்தில் பிளீச்சிங் பவுடர் வாங்குவது முதல் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டுவருவதால் அவர் மீது நடவடிக்கை எடுத்து அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என 12 ஒன்றியக்குழு உறுப்பினர்களில் அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட 9 பேர் திருத்தணி வருவாய் கோட்ட அலுவலரிடம் புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்காததால். மக்கள் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரனிடம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதை தொடர்ந்து எம்எல்ஏ எஸ்.சந்திரன் தலைமையில் 9 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பள்ளிப்பட்டு அதிமுக ஒன்றியக்குழு தலைவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் குறை தீர் நாள் முகாமில் ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமாரிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Related Stories:

More
>