பஞ்சாப் காங். தலைவர் சித்து திடீர் ராஜினாமா: பெண் அமைச்சர் உட்பட பலர் அடுத்தடுத்து விலகல்

சண்டிகர்: பஞ்சாப்பில் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து நேற்று திடீரென விலகினார். கடந்த 2017ல் பாஜவில் இருந்து காங்கிரசுக்கு தாவிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், முன்னாள் முதல்வர் அமரீந்தருக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. இதில் சித்துவின் கை ஓங்கியதால், அமரீந்தரின் எதிர்ப்பை மீறி சமீபத்தில் சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக்கப்பட்டார். கட்சியில் உள்ள சித்து ஆதரவாளர்கள் அமரீந்தருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

இதனால், அமரீந்தர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டார். புதிய முதல்வர் சரண்ஜித் சிங் தலைமையில் புதிய அமைச்சரவை 2 நாட்களுக்கு முன் பொறுப்பேற்றது. அமைச்சர்களுக்கான இலாகா நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு அமரீந்தர் சிங் முதல் முறையாக 2 நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றார். அங்கு அமரீந்தர், கட்சி மேலிடத்தை பார்த்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த பரபரப்பான சூழலில் நேற்று மதியம், சித்து திடீரென தனது மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

கட்சி தலைவர் சோனியாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ‘பஞ்சாப்பின் எதிர்காலத்திற்காகவும், நலனுக்காகவும் நான் எப்போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தாலும், தொடர்ந்து கட்சிக்காக உழைப்பேன்,’ என குறிப்பிட்டுள்ளார். சித்து ராஜினாமாவைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் அடுத்தடுத்து பதவிகளை ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதிதாக பதவியேற்ற மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரஸியா சுல்தானா தனது பதவியை ராஜினாமா செய்தார். சித்துவுக்காக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ரஸியா கூறினார். அதே போல், கட்சியின் பொதுச் செயலாளர் யோகிந்தர் தின்காராவும், பொருளாளர் குல்சர் இந்தர் சாஹலும் ராஜினாமா செய்தனர். அடுத்தடுத்த ராஜினாமாக்களால் பஞ்சாப் மாநில காங்கிரசில் உச்சகட்ட குழப்பம் நிலவுகிறது.

* ‘நிலையில்லாதவர்’: அமரீந்தர் காட்டம்

டெல்லியில் பேட்டி அளித்த முன்னாள் முதல்வர் அமரீந்தர், ‘‘சித்து நிலையில்லாதவர். டெல்லியில் உள்ள பஞ்சாப் முதல்வருக்கான இல்லத்தை காலி செய்யத்தான் இங்கு வந்தேன். நான் எந்த கட்சி தலைவரையும் சந்திக்க வரவில்லை’’ என்றார். மாநில தலைவராக பதவியேற்ற சித்து 72 நாளில் பதவி விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

* ஆம் ஆத்மி புது தகவல்

சித்து ராஜினாமா குறித்து ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், ‘‘தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் முதல்வரானது சித்துவுக்கு பிடிக்கவில்லை. அதனால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்’’ என புதுத்தகவலை கூறி உள்ளார்.

* பாஜ.வில் சேர்கிறாரா?

அமரீந்தர் சிங்கின் நேற்றைய டெல்லி பயணம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பாஜ.வில் சேரப் போவதாகவும், அதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கப் போவதாக காலை முதலே பரபரப்பு நிலவியது.

Related Stories:

More