விஜய் தேவரகொண்டா படத்தில் மைக் டைசன் நடிக்கிறார்

சென்னை: விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘லைகர்’ படத்தில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார். கரண் ஜோஹர், புரி ஜெகந்நாத், நடிகை சார்மி உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘லைகர்’. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் இந்த படம் உருவாகிறது. பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார். புரி ஜெகந்நாத் இயக்கி வருகிறார். தற்காப்பு கலையை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்க உள்ளார்.

இந்திய சினிமாவில் முதல் முறையாக நடிக்கும் மைக் டைசனுக்கு, பல கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் கோவாவில் நடக்கும் படப்பிடிப்பில் மைக் டைசன் கலந்துகொள்கிறார். ஹாலிவுட்டில் ஒரு சில படங்களில் அவர் நடித்திருக்கிறார். இது குறித்து டிவிட்டரில் விஜய் தேவரகொண்டா வெளியிட்ட பதிவில், ‘இந்திய திரைகளில் முதன் முறையாக, எங்கள் பிரமாண்டமான லைகர் குழுவில், இந்த உலகின் மோசமான மனிதன், குத்துச்சண்டையின் கடவுள், சகாப்தம், இரும்பு மனிதர் மைக் டைசன் இணைந்துள்ளார்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: