×

திருமாவளவனுக்கு எதிராக அவதூறு கருத்து: தெலங்கானா ஆளுநருக்கு எதிரான வழக்கு ரத்து

சென்னை: தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன், கடந்த 2017ல் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக இருந்தார். அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து ஊடகங்களில் கருத்து தெரிவித்தார். இதுதொடராக விசிக உறுப்பினர் தாடி கார்த்திகேயன், காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் தமிழிசை சவுந்தரராஜன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தமிழிசை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. சம்மனையும் வழக்கையும் ரத்து செய்யக்கோரி தமிழிசை சவுந்தரராஜன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அரசியல் சாசனம் பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் ஆகியவற்றை வழங்கினாலும் அதற்கான கட்டுப்பாடுகளையும் வகுத்துள்ளது. அரசியல் விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்காக இந்த வழக்கு தெரிகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்தோ அல்லது அதன் தலைவர் திருமாவளவனிடமிருந்தோ எந்த  அங்கீகாரமும் வழங்கப்படாத நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் கருத்தால் பாதிக்கப்படாத ஒருவர் வழக்கு தொடர்ந்ததை ஏற்க முடியாது. எனவே, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Tags : Thirumavalavan ,Telangana governor , Defamation suit against Thirumavalavan: Case against Telangana governor quashed
× RELATED தினமும் பொய் பேசும் அரசியல் காமெடியன் அண்ணாமலை: திருமாவளவன் விளாசல்