×

மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் கேட்ட டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

சென்னை: மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 கேட்டு மதுப்பிரியர்களிடம் அடாவடி செய்த டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதில், பெரும்பாலான கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார் வந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில் மதுபான சில்லரை விற்பனை கடைகளில் விலை பட்டியல் வைக்க வேண்டும். மதுபான சில்லறை விற்பனை கடைகளில் வாடிக்கையாளர்கள் மது வாங்கினால் ரசீது தர வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் எல்.சுப்பிரமணியன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், ராமநாதபுரம் திருவரங்கத்தில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 கேட்டு கடை ஊழியர் ஒருவர் மதுப்பிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  

மேலும், அந்த மதுப்பிரியர் இதை வீடியோவாகவும்  பதிவு செய்தார். அதில், மதுப்பிரியர், `தமிழக அரசு பாட்டிலுக்கு ரசீது தர வேண்டும் என்று கூறுகிறது. நீங்கள் பாட்டிலுக்கு ரூ.10 கேட்கிறீர்கள். நாங்கள் ஏன் கூடுதல் விலை தர வேண்டும்,’ என்று கேட்டார். அப்போது, கடை ஊழியர், `அரசு என்ன சொன்னால் எங்களுக்கு என்ன, நீ பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக  தரவேண்டும்,’ என்று கூறினார். மதுப்பிரியர், `கூடுதலாக பணம் தர முடியாது. நீங்கள் வேலையை விட்டு செல்லுங்கள். எங்களை போன்ற இளைஞர்கள் பலர் வேலையில்லாமல் இருக்கின்றனர்,’ என்று கூறினார். அப்போது கடை ஊழியர், `நீ என்ன வேண்டுமானாலும் செய். உன்னால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது,’ என்று கூறினார்.  

அதற்கு மதுப்பிரியர், உங்களது பெயர் என்ன என்று கடை ஊழியரிடம் கேட்க, கடை ஊழியரோ மதுபாட்டிலை கடைக்குள் எடுத்து வைக்கிறார். மதுப்பிரியரிடம் பணத்தை திருப்பி கொடுக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் மேலாண்மை இயக்குனருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் கடை விற்பனையாளர் சோலைராஜ், உதவி விற்பனையாளர் ராமகிருஷ்ணன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து ராமநாதபுரம் மாவட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Tasmac , Two Tasmac employees suspended for asking for extra money for liquor
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை