குலாப் புயல் கரையை கடந்த பின்னர் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பலத்த சூறை காற்று: 20 ஆயிரம் வாழைகள் நாசம்: விவசாயிகள் வேதனை

களக்காடு: குலாப் புயல் கரையை கடந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த சூறைகாற்று வீசியது. திருக்குறுங்குடி பகுதியில் வீசிய திடீர் சூறை காற்றில் திருக்குறுங்குடி, மாவடி, மலையடிபுதூர், ராஜபுதூர் மற்றும் சுற்று புறபகுதிகளில் பயிர் செய்யப்பட்டிருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து நாசமாயின. நாசமான வாழைகள் ஏத்தன், ரசகதலி வகைகளை சேர்ந்ததாகும். வாழைகள் குலை தள்ளிய நிலையில் காற்றில் நாசமானதால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து திருக்குறுங்குடி மகிழடியை சேர்ந்த விவசாயி குணசேகர் கூறுகையில், ‘பொதுவாக இப்பகுதியில் புரட்டாசி மாதம் காற்று வீசுவதில்லை. தற்போது தான் புரட்டாசி மாதத்தில் சூறைகாற்று வீசி எங்களது வாழைகளை நிர்மூலமாக்கியுள்ளது. எனக்கு மட்டும் 1000 வாழைகள் முறிந்து சேதமாகியுள்ளது. வாழைகளுக்கு உரியநேரத்தில் உரமிட்டு, தண்ணீர் பாய்த்து பாதுகாத்து வந்த நிலையில் திடீர் என வீசிய சூறை காற்றினால் நெடி பொழுதில் வாழைகள் மண்ணில் சாய்ந்து விட்டன’ என்றார்.

நாசமான வாழைகள் குறித்து வருவாய்துறையினர் கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்ப்பரிக்கும் அருவி

தென்காசி, நெல்லை மாவட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், குமரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் கொடுமுடியாறு அணைப் பகுதியில் 35 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பாபநாசத்தில் 10 மி.மீ, சேர்வலாறில் 6 மி.மீ, ராதாபுரத்தில் 5 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. இதுபோல் தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணை பகுதியில் 45 மி.மீ. மழை பதிவானது. ஆய்க்குடியில் 20 மி.மீ, தென்காசியில் 10.40 மி.மீ, குண்டாறில் 18 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கருப்பாநதி அணை பகுதியில் 8 மி.மீ, செங்கோட்டையில் 7 மி.மீ மழையும் பெய்துள்ளது.

நேற்று முன்தினம் இரவில் தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக நேற்று காலை அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.

Related Stories:

More