அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன்.: வரும் 30-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரும் 30-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அப்போது, போக்குவரத்துத் துறையில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.   

மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் வாகனங்களுக்கான ஜிபிஎஸ் கருவி கொள்முதலில் தகுதியுள்ள நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில், குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு முறைகேடாக டெண்டர் வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது. அதனையடுத்து வருமானத்துக்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாகவும் விஜயபாஸ்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதனால் கடந்த ஜூலை 22-ம் தேதி கரூர் உட்பட 20-க்கு மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், சொத்து ஆவணங்கள், முதலீட்டு ஆவணங்கள், பணப் பரிவர்த்தனை ஆவணங்களை பறிமுதல் செய்து போலீஸார் தொடர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக 55% சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது ஆலந்தூர் அலுவலகத்தில் செப்.30-ம் தேதி ஆஜராக எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More