ஐதராபாத்தில் பாதாள சாக்கடை கால்வாயில் தெரியாமல் தவறி விழுந்து உயிரிழந்த ஐ.டி ஊழியரின் உடல் மீட்பு

ஐதராபாத்: ஐதராபாத்தில் பாதாள சாக்கடை கால்வாயில் தெரியாமல் தவறி விழுந்து உயிரிழந்த ஐ.டி ஊழியரின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடந்த வெள்ளிக்கிழமை காலை உருவானது. இது, சனிக்கிழமை காலை மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்தது.

இந்நிலையில், இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மாலை மேலும் வலுவடைந்து புயலாக மாறி, வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த புயலுக்கு ‘குலாப்’ எனப் பெயரிடப்பட்டது.

இந்த புயலால் ஆந்திரா, ஒடிஷா போன்ற சில நகரங்களில் கனமழை பெய்தது. இந்த மழையால் பல இடங்களில் சாலை முழுவதும் மழை நீர் ஓடியது. இந்தநிலையில் ஐதராபாத்தில் உள்ள சைபராபாத்தின் மணிகொண்டா பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் முழங்கால் அளவு ஓடியது.

அப்போது அந்த பகுதியில் நடந்து வந்த ரஜினிகாந்த் என்ற நபர் சாக்கடை கால்வாய் என தெரியாமல் அதில் தவறி விழுந்துள்ளார். அவர் தவறி விழும் வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், அவரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படை, போலீஸ் மற்றும் ஐதரபாத் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்தநிலையில், இன்று பாதாள சாக்கடை கால்வாயில் உள்ளே விழுந்த அவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: