பல நாடுகளில் 2 டோஸ் போடாத நிலையில் அமெரிக்காவில் ‘பூஸ்டர்’ தடுப்பூசி தொடங்கியது : அதிபர் ஜோ பிடன் போட்டுக் கொண்டார்

வாஷிங்டன் : பல நாடுகளில் 2 டோஸ் தடுப்பூசியே இன்னும் போடப்படாத நிலையில், அமெரிக்காவில் பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டத்தை அந்நாட்டு அதிபர் ஜோ பிடன் தொடங்கி வைத்துள்ளார். உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனா பாதிப்பு மற்றும் மரணங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி தீவிரமாக போடப்பட்டு வருகிறது. 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அமெரிக்கர்களுக்கு, ஃபைசர் தடுப்பூசியின் மூன்றாவது டோசை போட அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டாளர்கள் பரிந்துரைத்தனர்.

அதையடுத்து, அதிபர் ஜோ பிடன் நேற்றிரவு கோவிட் -19 பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொண்டார். 78 வயதான அதிபர் ஜோ பிடன், முதலாவது டோஸ் தடுப்பூசியை கடந்த  டிச. 21ம் தேதியும், இரண்டாவது டோஸ் தடுப்பூசியை அடுத்த மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஜன. 11ம் தேதியும் ேபாட்டுக் கொண்டார். அவரது மனைவி ஜில் பிடனுடன் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

முன்னதாக, பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான அங்கீகாரம் அளித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பிடன், ‘நான் 65 வயதுக்கு மேற்பட்டவன் என்பதை ஒப்புக்கொள்வதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. இருந்தும் நான் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் ெகாள்வேன்’ என்று கிண்டலாக கூறினார். அமெரிக்காவில் உருமாறிய டெல்டா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், அங்கு தடுப்பூசி போடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், பூஸ்டர் தடுப்பூசி குறித்து இப்போதைக்கு பேச வேண்டாம் என்றும், பல நாடுகள் தடுப்பூசியின் இரண்டு டோசையே பெறாமல் உள்ளன என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து இருந்தது. இருந்தும், அமெரிக்காவில் பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை அந்நாட்டு அதிபரே தொடங்கி வைத்துள்ளார்.

Related Stories:

More
>