தமிழகத்திற்கு 48 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையப்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய காவிரி நதிநீரை வழங்க வேண்டும். கடந்த காலங்களில் கர்நாடக அரசு காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கு உரிய நீரை காலத்தே திறந்துவிடாமல் இருந்தது இன்னும் தொடர்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைபெய்து வரும் நிலையில் கூட தண்ணீரை திறந்துவிட மறுக்கிறது கர்நாடக அரசு.

காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு ஏற்ப செயல்படுவதில்லை. மேலும் ஏற்கனவே காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய ஆலோசனை கூட்டத்தில் ஆணையம் பிறப்பித்த உத்தரவையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக செப்டம்பர் 23ம் தேதி வரை திறந்துவிட்டிருக்க வேண்டிய 37.3 டி.எம்.சி. தண்ணீரில் 28 டி.எம்.சி தண்ணீரை திறக்காமல் காலம் தாழ்த்துகிறது. இந்நிலையில் நேற்று டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழக அரசும் காவிரி நதிநீர் பெறுவது தொடர்பாக நியாயத்தை முன் வைத்திருக்கிறது. எனவே கடந்த மாத நிலுவையில் உள்ள 28 டி.எம்.சி. தண்ணீர் மற்றும் இந்த மாதம் இதுவரை திறந்துவிட வேண்டிய நீரில் நிலுவையில் உள்ள 20 டி.எம்.சி தண்ணீர் என மொத்தம் 48 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டியது கர்நாடக அரசின் கடமை. மேலும் அக்டோபர் மாதத்திற்கான நீரையும் முறைப்படி திறந்துவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories:

More