வில்லிவாக்கம் 200 அடி சாலையில் தறிகெட்டு ஓடிய கார் மோதி சாலை தடுப்பு சுவருக்கு வர்ணம் பூசிய 2 பெண்கள் உயிரிழப்பு; 6 பேர் படுகாயம்: இன்ஜினியரிங் மாணவன் கைது

அண்ணாநகர்: வில்லிவாக்கம் 200 அடி சாலையில் தறிகெட்டு ஓடிய கார் மோதியதில் தடுப்புச்சுவருக்கு வர்ணம் பூசிக்கொண்டிருந்த 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சிறுவன் உள்பட 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை வில்லிவாக்கம் 200 அடி சாலை தாதான்குப்பம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் தடுப்புச்சுவருக்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 3 மணி அளவில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஷகிலா(27), மலர்(33), ராதா(32), அம்சவள்ளி(40), காமாட்சி(25), மூர்த்தி(30), சத்யா(26), முருகேசன்(30), கவுதம் (10) ஆகிய 8 பேர் தடுப்பு சுவருக்கு வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த சமயத்தில், ரெட்டேரியில் இருந்து பாடி நோக்கி வேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அங்கு வர்ணம் பூசிக்கொண்டிருந்தவர்கள் மீது பாய்ந்தது.  

இந்த விபத்தில், பெண்கள், சிறுவன் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் துடித்தனர். அப்பகுதியில் வாகன ஓட்டிகள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் திருமங்கலம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயத்துடன் துடித்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஷகிலா, காமாட்சி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த சிறுவன் உள்பட 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி திருமங்கலம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து, விபத்தை ஏற்படுத்திய சென்னை பெரம்பூர் சிவகாமி தெருவை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவன் சுஜித்தை(19) கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>