வேலூர் வள்ளலார் பகுதியில் மீண்டும் முழுஅளவீடு செய்து ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி அரசு இடங்களுக்கு வேலி அமைக்க வேண்டும்-நேரில் ஆய்வு செய்த கலெக்டர் அதிரடி உத்தரவு

வேலூர் : வேலூர் வள்ளலாரில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் உட்பட ஒட்டுமொத்தமாக சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அரசு இடங்களுக்கு வேலி அமைக்க வேண்டும் என்று கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். வேலூர் அடுத்த வள்ளலாரில் 22வது வார்டு எஸ்டைப் பகுதியில் மலையடிவாரத்தில் நீர்வழித்தடம் உட்பட பல ஏக்கர் நிலங்களை வளைத்து ஆக்கிரமித்து குடியிருப்புகளைபோல கட்டப்பட்டிருந்தது. ஹாலோபிரிக்ஸ் கற்களால் சிறு அறைகளைபோல கட்டப்பட்டிருந்த அந்த வீடுகளில் எந்த பொருட்களும் இல்லை. ஆனால் இடத்தை பிடித்து அதில் கட்டிடம் கட்டி வசித்து வருவது போலவும், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு பெற்றுள்ளதாக கூறி இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை பல லட்சங்களுக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருவதாக புகார்கள் எழுந்தது.

இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த மாதம் 5ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து ேவலூர் ஆர்டிஓ பொறுப்பு வெங்கட்ராமன் தலைமையில், தாசில்தார் செந்தில் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க அனுமதி கொடுத்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் துணை தாசில்தார் தடையில்லா சான்று கொடுத்திருந்தது தெரியவந்தது.

மேலும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கியது தொடர்பாக மாநகராட்சிக்கும் நோட்டீஸ் வழங்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால், தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது.  இந்நிலையில் வேலூர் வள்ளலார் எஸ்டைப் பகுதியில் ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை இடித்து அகற்றுவதோடு, அப்பகுதியில் ஒட்டுமொத்தமாக சர்வேயர் மூலம் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, அரசு இடங்களுக்கு வேலி அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில், ‘வேலூர் வள்ளலாரில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்ற உத்தரவிட்டுள்ளேன். அரசுக்கு சொந்தமான இடங்கள் எவ்வளவு உள்ளது என்று அளவீடு செய்து வேலி அமைக்க உத்தரவிட்டுள்ளேன். விரைவில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்புகள்  எந்தவித சமரசமும் இன்றி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இந்த ஆய்வின்போது, ஆர்டிஓ விஷ்ணுபிரியா, தாசில்தார் செந்தில், உதவி கமிஷனர் மதிவாணன் ஆகியோர் உடனிருந்தனர்.

சாலையை மறித்து கட்டிய கட்டிடம் உடனடி அகற்றம்

வேலூர் வள்ளலார் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 7 வீடுகளை நேரில் ஆய்வு செய்ய கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று நேரில் சென்றார். அப்போது ஆக்கிரமிக்கப்பட்ட வீடுகள் உள்ள இடத்திற்கு செல்லும் சாலையை மறித்து ஒரு கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. அதனை பார்த்த கலெக்டர் உடனடியாக அந்த ஆக்கிரமிப்பை அகற்றும்படி உத்தரவிட்டார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கால்வாய்கள், சாலையினை தூய்மை செய்ய வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகராட்சி உதவி கமிஷனர் மதிவாணன் தலைமையில் ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்றினர்.

Related Stories:

More
>