நாமக்கல் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்-அதிக நேரம் வேலை வாங்குவதாக புகார்

நாமக்கல் : நாமக்கல் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நாமக்கல் அரசு மருத்துவமனையில், துப்புரவு பணிகளை தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் 102 துப்புரவு பணியாளர்களை நியமித்து பணிகளை மேற்கொள்கிறது. இதில், 75 பேர் பெண்கள் ஆவர். தனியார் நிறுவனத்துக்கும், ஊழியர்களுக்குமிடையே கடந்த ஒரு மாதமாக சம்பள பிரச்னை மற்றும் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. நேற்று மாலை தனியர் நிறுவன மேலாளர் அருள்பிரகாஷ் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, ஊழியர்கள் மருத்துவக்கழிவுகளை பிரிப்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. 12 மணி நேரம் வேலை வாங்கி விட்டு 8 மணி நேரத்துக்கு மட்டும் சம்பளம் தருவதை நிறுத்திக்கொண்டு கூடுதல் சம்பளம் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. இதனை கண்டித்து தூய்மை பணியாளர்கள் அனைவரும் திடீரென மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்கள் கூறியதாவது:  கொரோனாவை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவமனை கழிவுகளை நாங்கள் தான் அகற்றி வருகிறோம். அதற்கு முன்பு வார்டுகளை சுத்தம் செய்யும் பணியை மட்டும் செய்து வந்தோம். மருத்துவ கழிவுகள், நோயாளிகள் வெளியே வீசும் கழிவு உணவுப்பொருட்களை தொடர்ந்து அகற்றுவதால், எங்களுக்கு உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டே வேலை செய்து வருகிறோம்.

தினமும் 12 மணி நேரம் வேலை செய்கிறோம். ஆனால், 8 மணி நேரத்துக்கு மட்டும் ₹7000 சம்பளமாக தருகிறார்கள். கூடுதல் பணிக்கான சம்பளத்தை நிறுவன உயரதிகாரிகள் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். எனவே, இனிமேல் மருத்துவ கழிவுகளை பிரிக்கும் வேலை செய்ய மாட்டோம். சம்பளமும் அதிகம் தரவேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஊழியர்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த நாமக்கல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சங்கீதா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு 8 மணியை கடந்தும் ஊழியர்களின் போராட்டம் நீடித்தது. ஆனால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த யாரும் முன்வரவில்லை. இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

Related Stories:

More
>