×

சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் தைரியமிகு தியாகம் எண்ணற்ற மக்களிடையே தேச பக்தியை தூண்டியது!: பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி..!!

டெல்லி: சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் தைரியமிகு தியாகம் மக்களிடையே தேச பக்தியை தூண்டியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையான பகத் சிங்கின் 114-வது பிறந்த தினம் இந்தியா முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதலே பலர் இது குறித்தான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரபலங்கள் எனப் பலரும் பகத் சிங்கை நினைவு கூர்ந்தனர். இந்நிலையில் இந்திய விடுதலைக்காக வீர தீரத்துடன் போராடிய பகத் சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகத் சிங் பிறந்த தினம் குறித்தான வாழ்த்துப் பதிவினை பதிவிட்டுள்ளார். அதில், வீரம் நிறைந்த பகத்சிங், ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் வாழ்ந்து வருவதாகவும், அவரது தைரியமிகு தியாகம், எண்ணற்ற மக்களிடையே நாற்றுப்பற்றுக்கான பொறியை பற்ற வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.  பகத் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தலை வணங்குவதாகவும், அவரது உயரிய கருத்துக்களை நினைவு கூறுவதாகவும் மோடி குறிப்பிட்டிருக்கிறார்.

பகத் சிங் வரலாறு:

புரட்சிகர சுதந்திர போராட்ட வீரரான பகத் சிங், பஞ்சாபில் உள்ள பைசலாபாத் மாவட்டம்  பங்கா என்னும் கிராமத்தில் 1907ம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். விடுதலைப் போராட்ட வீரர்களை கொண்ட சீக்கிய குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார். சோசலிச புரட்சியாளராக ஆங்கிலேயர்களுக்கு எதிராக தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார்.

63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு சம உரிமை பெறுவதற்காக உண்ணாவிரதம் இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாக இருந்த காவல் அதிகாரியைச் சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக, பகத் சிங் 24வது வயதில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது.

Tags : Bhagat Singh ,Narendra Modi , Freedom fighter Bhagat Singh, sacrifice, patriotism, Prime Minister Modi
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...