சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 80 மகளிருக்கு ₹8.63 லட்சம் நல உதவி-கலெக்டர் வழங்கினார்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் 80 முஸ்லிம் மகளிருக்கு ₹8.63 லட்சம் நலத்திட்ட உதவிகள் மற்றும் 25 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டைகளை கலெக்டர் வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு, 3 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, மாவட்ட அளவிலான சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து பேசுகையில், ‘ முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ், கடந்த 3 ஆண்டில் சுமார் ₹50 கோடியே 95 லட்சத்து 48 ஆயிரத்து 148 மதிப்பில் இலவசமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

பின்னர், 25 நபர்களுக்கு மருத்துவக் காப்பீடு அட்டைகளை வழங்கி, திட்டம் குறித்த விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டு, மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர். பரமசிவன், திட்ட அலுவலர் ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், 80 முஸ்லிம் மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் 70 முஸ்லிம் மகளிருக்கு பழம் மற்றும் காய்கறி வியாபாரம் செய்வதற்காக நபர் ஒருவருக்கு ₹9 ஆயிரத்து 500 வீதம் 70 நபர்களுக்கு ₹6 லட்சத்து 65 ஆயிரமும், தொழில் செய்வதற்காக சக்கர தள்ளுவண்டிகள் 10 பேருக்கு தலா ₹19 ஆயிரத்து 800 வீதம் ₹1.98 லட்சம் என மொத்தம் 80 பேருக்கு ₹8.63 லட்சத்துக்கான காசோலைகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் டிஆர்ஓ ராஜேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் அமீர்பாஷா, முஸ்லிம் மகளிர் உதவி சங்கம் தலைவர் ஹபீசுல்லா, துணை தலைவர்கள் சையதுநசீர், மகபூர்பாஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

More
>