குலசை கோயிலில் மாலை அணிந்து விரதம் தொடக்கம் தசரா வேடப் பொருட்கள் நெல்லையில் விற்பனை மும்முரம்

நெல்லை :  தசரா  பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் தசரா வேடப்பொருட்கள் விற்பனை களை  கட்டியுள்ளது. இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா நவம்பர் 6ம் தேதி  தொடங்குகிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் வேடம் அணிந்து விரதம்  மேற்கொள்கின்றனர். இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. பக்தர்கள் விரதம் இருந்து வேடம் அணிந்து வலம் வருவது தான் இந்த விழாவின் சிறப்பாகும். வரலாற்று  சிறப்புமிக்க குலசை முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் தசரா திருவிழாவில்  லட்சக்கணக்கான பக்தர்கள் வேடம் அணிந்து விரதம் மேற்கொள்வர்.

தசரா திருநாளின் 10ம் நாளன்று குலசை கடற்கரையில் நடைபெறும் அம்பாள் சூரசம்ஹார  நிகழ்ச்சிக்கு பின் விரதத்தை பக்தர்கள் நிறைவு செய்வார்கள். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.  தற்போது 2ம் அலை பரவல் நீடிக்கும் நிலையில் வழிபாட்டுத்தலங்களில் திருவிழா  நாட்களிலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் சுவாமியை வழிபட தடை  நீடிக்கிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான தசரா திருவிழாவிற்காக  பக்தர்களுக்கான வேடப்பொருட்கள் வழக்கம் போல் நெல்லை கடைகளில் விற்பனைக்கு  வந்து குவிந்துள்ளன. நெல்லை டவுன் சுவாமி சன்னதியில் உள்ள தசரா  வேடப்பொருட்கள் விற்பனை கடைகளில் விதவிதமான வேடப்பொருட்கள் இந்தியாவின்  பல்வேறு மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு விற்பனைக்கு  வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக காளி வேடத்திற்கான அலங்கார பொருட்களை  பக்தர்கள் அதிக ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.

மேலும்  போலீஸ், டாக்டர், பிள்ளையார், முருகன், சிவன் உள்ளிட்ட கடவுள் உருவங்களின்  வேடப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கடைசி

10 நாட்கள் அதிகளவில்  பக்தர்கள் விரதம் மேற்கொள்வர் என்பதால் அடுத்த வாரம் விற்பனை மேலும்  களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே  நேரத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வழக்கமாக வேடபொருட்கள்  வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு கோயிலில் அனுமதி  இல்லாததால் 50 சதவீதம் பேரே வேடப்பொருட்கள் வாங்கினர்.

Related Stories:

More
>