×

`ஆண்டியாபுரம் போறீங்களா?’ கண்மாய் பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லை-எச்சரிக்கும் கிராம மக்கள்

சிவகாசி : சிவகாசி அருகே அனுப்பன்குளம்-ஆண்டியாபுரம் சாலையில் உள்ள கண்மாய் பாலத்தில் தடுப்பு சுவர் இல்லததால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிவகாசி அருகே அனுப்பன்குளம் டூ ஆண்டியாபுரம் சாலையில் உள்ள நீர்வழிபாதையில் குறுகிய வளைவு பாலம் உள்ளது. அனுப்பன்குளம் கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்து இந்த பாலம் வழியாக உபரிநீர் வெளியேறுகிறது. சாத்தூரிலிருந்து வரும் வாகனங்கள் சிவகாசி செல்லாமல் இந்த பாலம் சாலை வழியாக நாராணாபுரம், பள்ளபட்டி, திருத்தங்கல் செல்ல முடியும். பயண நேரம், கிலோ மீட்டர் தூரம் குறைவதால் இந்த சாலையில் சரக்கு வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும்.

மேலும் இந்த பாலம் வழியாக தினமும் ஏராளமான பட்டாசு, தீப்பெட்டி ஆலைக்கு செல்லும் வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த குறுகிய வளைவு பாலத்தில் இருபுறமும் தடுப்புச்சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றனர். மேலும், இப்பகுதியில் சாலையில் விளக்குகளும் இல்லாததால், இரவு நேரங்களில் டூவீலர்களில் செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர். அத்துடன் எதிரே வரும் வாகனத்திற்கு இடம் கொடுக்க பாலத்தில் ஒதுங்கும் வாகனங்கள், பல நேரங்களில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பீதியுடன் பயணிக்கின்றனர். குறுகலான இந்த வளைவு பாலத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றன. எதிர்பாராத நேரங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று உரசி கண்மாய்குள் கவிழும் அபாயமும் உள்ளது.

இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் செல்லும் டூவீலர் ஓட்டிகளிடம் அப்பகுதி மக்கள் பாலத்தில் போகும்போது, ` பார்த்து போங்க’ என்று எச்சரித்து அனுப்புகின்றனர். இந்த பகுதியை சுற்றி 100 மீட்டர் தூரம் தடுப்புச்சுவர் அமைக்க, அப்பகுதி மக்கள், நெடுஞ்சாலைத் துறை நிர்வாகத்திற்கு பல முறை முறையிட்டும் பலனில்லை. விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் தடுப்புச்சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Tags : Andiyapuram ,Kanmai bridge , Sivakasi: There is a risk of getting into an accident due to the lack of a retaining wall on the Kanmai bridge on the Anuppankulam-Andiyapuram road near Sivakasi.
× RELATED அச்சத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்...