×

வேளாண்சட்டங்களை திரும்ப பெறக்கோரி கரூர் மாவட்டத்தில் 6 இடங்களில் சாலை மறியல்-371 பேர் கைது

கரூர் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கரூர் மாவட்டம் முழுவதும் 6 இடங்களில நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 371பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.‘வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்பாக குறைப்பதை கைவிட வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் செப்.27ம்தேதி இந்தியா முழுவதும் சம்யுக் கிஷான் மோர்சா என்ற அமைப்பின் சார்பில் பாரத் பந்த் அறிவித்திருந்தது.இதனடிப்படையில், கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு எல்பிஎப் மாவட்ட தலைவர் அண்ணாவேலு தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

 இந்த மறியல் போராட்டத்தில் எல்பிஎப், ஏஐடியூசி, சிஐடியூ, ஐஎன்டியூசி உட்பட பல்வேறு அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் 29 பெண்கள் உட்பட 179பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

இதே போல், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், தரகம்பட்டி, தோகைமலை ஆகிய 6 பகுதிகளில் மறியல் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் 371 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 63பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி ஒன்றியம் பள்ளபட்டி கனரா வங்கி முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் விவசாய சங்கங்கள் விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் சார்பாக சாலை மறியல் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

மறியல் போராட்டத்தை விளக்கி சிஐடியூமாவட்ட உதவிச் செயலாளர் ராஜாமுகமது விளக்க உரையாற்றினார். இதில், 15 பெண்கள் உள்ளிட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், ஒன்றிய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் சுய ஆட்சி இந்தியா கட்சி தலைவர் கிறிஸ்டினா சாமி, காங்கிரஸ் ஓபிசி பிரிவு மாநில செயலாளர் தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணராயபுரம் காங்கிரஸ் வட்டார தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட அமைப்பினர் ஒன்றிணைந்து சிறுவர் சிறுமிகளுடன் சித்தலவாய் ரயில் நிலையத்தில் நேற்று மதியம் 1.50மணி திருச்சி-பாலக்காடு விரைவு பயணிகள் வண்டியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு ரயில் நிலையத்திற்குள் சென்றனர். அப்போது அங்கு ஏடிஎஸ்பி கீதாஞ்சலி, டிஎஸ்பி தர் மற்றும் ரயில்வே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதிக்காததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாக்குவாதம் நடைபெற்றது. பின்னர் மாயனூர் இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் போலீசார் 86 பேரை கைது செய்து வேனில் அழைத்து சென்று மாயனூர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தோகைமலை: தோகைமலை பேருந்து நிலையம் அருகே குளித்தலை மணப்பாறை சாலையில் நடந்த சாலைமறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். . தமிழ்நாடு பொதுதொழிலாளர் பாதுகாப்பு நல சங்கத்தின் பொதுச்செயலாளர் உருசுலாநாதன், மாநில தலைவர் செல்வராஜ், விசி கட்சியின் தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குளித்தலை டிஎஸ்பி (பொ) சக்திவேல், தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 49 பேரை கைது செய்து செய்து வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்து மாலை 6 மணிக்கு கைது செய்த அனைவரையும் விடுதலை செய்தனர்.குளித்தலை: குளித்தலையில் இந்திய தொழிற்சங்க மையம்,  விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு சாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துச்செல்வன் தலைமை வகித்தார். காந்தி சிலையில் போராட்டம் தொடங்கி தலைமை தபால் நிலையம் நோக்கி  சென்ற போது போலீசார் தடுத்து நிறுத்தியதால் காவேரி நகர் வளைவு அருகே போராட்டக்குழுவினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சங்கரநாராயணன் உள்பட 44 ஆண்கள், 4 பெண்கள் உள்பட  48 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலாயுதம்பாளையம்: இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  நொய்யல் குறுக்குச் சாலையில் சாலை மறியல்  கரூர் ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. .மறியலில் ஈடுபட்ட 3  பெண்கள் உள்பட 26 பேரை  கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

Tags : Karur , Karur: At 6 locations across Karur district on behalf of the Federation of Farmers and Workers emphasizing various demands
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்