மதுரையில் 18 மாதங்களுக்கு பின் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!: 13 வட்டங்களை சேர்ந்த அலுவலர்கள், விவசாயிகள் நேரடியாக பங்கேற்பு..!!

மதுரை: மதுரையில் 18 மாதங்களுக்கு பிறகு விவசாயிகளின் நேரடி குறைதீர் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரையில் 18 மாதங்களுக்கு பின் நடைபெற்று வரும் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள், வேளாண் அதிகாரிகள் நேரடியாக தங்களுடைய குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து வருகின்றனர். வழக்கமாக மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர கூட்டங்கள் நடைபெறும். அச்சமயம் மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் சந்திக்கின்ற பிரச்சனைகள் குறித்தான தீர்வுகள் காணப்படுவது வழக்கம். கொரோனா பரவல் கடந்த 2020 மார்ச் மாதம் தொடங்கியது முதல் இத்தகைய கூட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு விவசாய குறைதீர் கூட்டங்கள் இணையவழி மூலமாக நடைபெற்றாலும் கூட விவசாயிகள் ஆர்வமின்றி பங்கேற்று வந்தனர்.

தற்போது கொரோனா பரவலுக்கு பின் முதல்முறையாக நேரடியாக கூட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 13 வட்டங்களை சேர்ந்த அலுவலர்கள், விவசாயிகள் நேரடியாக பங்கேற்றுள்ளனர். உர தட்டுப்பாடு, விதை, நீர் நிலைகளை மேம்படுத்துவது, விவசாய கடன்களை முறையாக பெறுவது உள்ளிட்டவை தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு அதிகளவில் விவசாயம் கூடுவதற்கான வாய்ப்பு இருப்பதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் சார்பாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

Related Stories:

More
>