கால்நடை வளர்ப்பில் தொழில் முனைவோராக வேண்டுமா?மருத்துவ அறிவியல் துறை உதவி பேராசிரியர் ஆலோசனை

மன்னார்குடி : நீடா வேளாண் அறிவியல் நிலையம் கால்நடை மருத்துவ அறிவியல் துறை உதவிப்பேராசிரியர் டாக்டர் சபாபதி கூறியது :கறவை மாடு வளர்ப்பு: கறவை மாடு வளர்ப்பு மிக கடினமான ஒன்று. சரியான முறையில் பாலை சந்தைப் படுத்தவில்லை என்றால் மிகுந்த பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும். இதில் பால் கறப்பது, சினை ஊசி போடுவது முதல் கொட்டகையை சுத்தம் செய்வது வரை அனைத்தும் நாமே செய்ய வேண்டியது இருப்பதால் இதில் வேலைப்பளு மிக அதிகம். புதிதாக கால் நடை தொழில்முனைவோராக வருபவர்களுக்கு மிகுந்த சவாலானதாக இருக்கும்.

கறவை மாடு வளர்ப்பதன் சிறப்பு அம்சமே அதன் சாணம் தான். ஒரு பசு ஆண்டுக்கு ஏறக்குறைய 2.5 டன் சாணத்தைக் கொடுக்கும். இந்த சாணத்தை சரியான முறையில் மண்புழு உரம் மற்றும் பஞ்சகாவியா போன்ற இயற்கை உரங்கள் தயாரித்து அவற்றை நல்ல விலைக்கு சந்தைப்படுத்துவதிலேயே பண்ணையின் வெற்றி உள்ளது.

ஆடு வளர்ப்பு:

ஆடு வார்ப்பதற்கு முன் காடு வளர்க்க வேண்டும் என்பார்கள். கறவை பசுவுடன் ஒப்பிடு கையில் ஆடு வளர்ப்பு சிறந்த லாபம் கொழிக்கும் தொழிலாக பார்க்கப்படுகிறது. ஆனால் திட்டமிட்டு ஆரம்ப செலவினங்களை குறைக்காவிட்டால் லாபம் கிடைப்பது அரிது. பெரும்பாலானவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு கொட்டகை மற்றும் நிரந்தர செலவினங்களுக்கு அதிக முதலீடு செய்வது.

எளிமையான முறையில் கொட்டகை அமைப்பதன்‌ மூலம் அதிக முதலீடை ஆடுகள் வாங்குவதற்கும், தீவன மரங்கள் பயிரிடுவதற்கு செலவிட இயலும். ஆடு வளர்த்தால் இரண்டு ஆண்டுகள் கழித்து லாபம் சம்பாதிக்க இயலும்.இரண்டு- இரண்டரை ஆண்டு காலம் வரை வருமானம் எதிர்பாராமல் முதலீடு மட்டும் செய்து காத்திருப்பது முக்கியமானது. 10 தாய் ஆடுகள் மூலம் ஆண்டுக்கு 1.2 விலிருந்து 1.6 லட்சம் வரை சம்பாதிக் கலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் 40 ஆடுகள் வளர்க்கலாம்.

நாட்டு கோழி வளர்ப்பு:

நாட்டுக்கோழி வளர்ப்பது மிக எளிதானது. தீனி கொடுக்க அல்லது மேய்ச்சல் முறையில் இயற்கையான முறையில் வளர்ப்பது மிகச் சிறந்தது.  கொட்டகை பாதுகாப்பாக அமைப்பது மிக அவசியம். அரை ஏக்கர் பரப்பளவில் ஏறக்குறைய இரண்டாயிரம் கோழிகளையும் ஒரு ஏக்கர் பரப்பளவில் 4000 நாட்டுக் கோழிகளையும் இயற்கையான முறையில் வளர்க்க இயலும். இதனால் ஆண்டுக்கு மூன்று முதல் 6 லட்சம் வரை எளிதில் சம்பாதிக்க இயலும். இவ்வாறு கால்நடை மருத்துவ அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் சபாபதி தெரிவித்தார்.

Related Stories:

>