×

ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நாகையில் 12 இடங்களில் மறியல் போராட்டம்-எம்எல்ஏ உள்பட 819 பேர் கைது

நாகை : அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நாகை மாவட்டத்தில் 12 இடங்களில் சாலை மறியல் போராட்டமும், ஒரு இடத்தில் ரயில் மறியல் போராட்டமும் நடந்தது. இதில் ஒரு எம்எல்ஏ உட்பட 819 பேரை போலீசார் கைது செய்தனர்.விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நேற்று (27ம் தேதி) நாடு தழுவிய பந்த் நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் நாகை அருகே சிக்கல் கடைவீதியில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் சரபோஜி ஆகியோர் தலைமை வகித்தனர். 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை குறைக்க வேண்டும். தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாகை -திருவாரூர் சாலையில் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் 50 பெண்கள் உட்பட 100 பேரை டிஎஸ்பி ரமேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

விசி கட்சி மாவட்ட துணைத்தலைவர் பேரறிவாளன், மதிமுக ஒன்றிய செயலாளர் அய்யாப்பிள்ளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் பகு மற்றும் பலர் கலந்து கொண்டனர். நாகை அருகே சிக்கல் கடைவீதி, கீழ்வேளூர் ஆகிய பகுதிகளில் 250 கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. திருக்கண்ணங்குடி ரயில்வே ஸ்டேசனில் கீழவேளூர் எம்எல்ஏ நாகைமாலி தலைமையில் எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்தனர். இதனால் 30 நிமிடம் ரயில் காலதாமதமாக சென்றது. காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அமிர்தராஜா, சிபிஐ கட்சி மாவட்ட செயலாளர் சம்பந்தம், விசிகட்சி மாவட்ட செயலாளர் கதிர்நிலவன் உள்பட 60 பெண்கள் உட்பட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் நாகூர் அருகே வாஞ்சூர் ரவுண்டானாவில் சாலைமறியலில் ஈடுபட்ட சிபிஎம் கட்சி நகர செயலாளர் மணி தலைமையில் 30 பெண்கள் உட்பட 87 பேரையும், வேளாங்கண்ணி ஆர்ச் அருகே விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் சாலை மறியல் செய்த 52 பேர், நாகை புத்தூர் ரவுண்டானாவில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாவட்ட துணைத்தலைவர் அக்பர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்திய 25 பேரையும், கீழையூர் அருகே மேலப்பிடாகை கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலைமறியல் செய்த 27 பேரையும், சிபிஎம் சார்பில் நடந்த சாலை மறியலில் 24 பெண்கள் உட்பட 85 பேரையும்,

வலிவலம் அருகே கொளப்பாடு கடைவீதியில் நடந்த சாலை மறியலில் 41 பேரையும், வலிவலம் அருகே பனகல் நால்ரோட்டில் நடந்த சாலை மறியலில் 13 பேர், வேட்டைகாரனிருப்பு அருகே வெள்ளப்பள்ளம் கடைவீதியில் சாலைமறியல் செய்த 25 பேர், வாய்மேடு அருகே மருதூர் கடைவீதியில் சாலை மறியல் செய்த 31 பேர், வாய்மேடு அருகே தாணிக்கோட்டகம் கடைவீதியில் சாலைமறியல் செய்த 56 பேர், கரியாப்பட்டினம் அருகே சாருமதி கடைவீதியில் சாலைமறியல் செய்த 33 பேரை போலீசார் கைது ெ சய்தனர். நாகை மாவட்டத்தில் 12 இடங்களில் சாலை மறியல் போராட்டமும், ஒரு இடத்தில் ரயில் மறியல் போராட்டமும் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ நாகை மாலி உள்பட 819 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 167 பேர் பெண்கள் ஆவார்கள்.

Tags : Nagaland ,U.S. , Nagai: On behalf of the All India Farmers' Struggle Coordinating Committee in Nagai district against the agricultural laws of the United Kingdom
× RELATED வடகிழக்கில் 3 மாநிலங்களில்...