ஈரோடு : மக்காச்சோளம் சாகுபடியில் உழவியல் தொழில்நுட்பங்களை பின்பற்றி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம் என வேளாண் அறிவியல் நிலையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் முதல் 20ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. மக்காச்சோளம் கால்நடை தீவனமாகவும், மக்களின் உணவு பொருளாகவும் உள்ளதால், அதன் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்காச்சோள பயிரானது வருடம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும், ஆடி, புரட்டாசி மற்றும் தை பட்டங்களில் விதைப்பினை மேற்கொள்வது பயிர்கள் செழித்து வளர்வதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தும்.
நல்ல தரமான பூச்சி மற்றும் நோய் தாக்காத விதைகளையே விதைப்பிற்கு தேர்ந்தெடுக்க வேண்டும். விதை நேர்த்தி செய்து விதைத்தால் விதைப்புத்திறன் அதிகரிக்கும். நிலத்தை நன்கு புழுதிபட உழவு செய்து, கடைசி உழவுக்கு முன் ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரம் இடுதல் வேண்டும். பின்னர், 2 அடி இடைவெளியில் பார்கள் அமைத்து, ஒரு ஏக்கருக்கு 8 கிலோ தேர்வு செய்யப்பட்ட விதைகளை பார்களில் 25 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.
ஒரு குழிக்கு 2 விதைகள் வீதம் விதைக்க வேண்டும். நடவு செய்த 12 முதல் 15 நாட்களுக்குள் பயிர்களை களைதல் வேண்டும். மக்காச்சோள பயிரானது அதிக வறட்சியையும், நீரையும் தாங்கி வளராது. எனவே, பயிரின் வளர் நிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப 9 முதல் 11 முறை நீர் பாய்ச்சல் அவசியம். குறிப்பாக, பயிரின் முக்கிய வளர் நிலையான 45 முதல் 65 நாட்களுக்கு தண்ணீர் கட்டுவதன் மூலம் அதிக விளைச்சலை பெறலாம். களைகளை கட்டுப்படுத்த விதை விதைத்த 3 முதல் 5 நாட்களுக்குள் களைகொல்லியான அட்ரடாப் மருந்து 200 கிராமினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, ஒரு ஏக்கர் பரப்பளவில் தெளிக்க வேண்டும்.
மேலும், 30-35 நாட்களுக்குள் மீண்டும் ஒரு முறை களைகளை எடுப்பதன் மூலம் பயிர்கள் போட்டியின்றி வளர உதவும். ஊட்டச்சத்துக்களை பொருத்தமட்டில் மண் பரிசோதனை அடிப்படையில் உரமிடுவது சிறந்த மகசூலுக்கு வழிவகுக்கும். மண் பரிசோதனை செய்ய இயலாத பட்சத்தில் பொதுபரிந்துரைகளை பின்பற்றலாம். அதாவது, ஏக்கருக்கு 100:30:30 கிலோ, தழை, மணி, சாம்பல் சத்துக்களை தரவல்ல உரங்களை பயிருக்கு வழங்கலாம். பரிந்துரைக்கப்படும் உர அளவினை வேளாண் வல்லுநர்களின் ஆலோசனைப்படி 3 அல்லது 4 முறை பிரித்து வழங்குவதின் மூலம் உரங்களின் உபயோகத்திறனை அதிகரிக்கலாம்.
நுண் சத்துக்களை பொருத்தவரை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நுண்ணூட்டக்கலவையை ஏக்கருக்கு 12 கிலோ வீதம் அடியுரமாக இட வேண்டும். மக்காச்சோள மேக்சின் நுண்ணூட்டத்தை ஏக்கருக்கு 3 கிலோ வீதம் பூக்கும் தருணத்திலும், கதிர் உருவாகும் தருணத்திலும் 200லிட்டர் தண்ணீர் மற்றும் ஒட்டும் திரவம் கலந்து தெளிக்கலாம். இந்த தொழில்நுட்பங்களை ஒருங்கிணைந்த முறையில் கடைபிடித்தால் மக்காச்சோள பயிரின் மகசூலை கூடுதலாக பெறலாம். இத்தகவலை ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலையத்தின் உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் சரவணன் தெரிவித்துள்ளார்.
