மார்க்கெட் வியாபாரிகள் சங்க தேர்தலுக்கு அனுமதியின்றி வேட்புமனு தாக்கல் செய்ததால் தடுத்து நிறுத்தம்

ஈரோடு : ஈரோடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அனுமதியின்றி நடந்ததால் போலீசார் தடுத்து நிறுத்தினர்.ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் காய்கனி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத்துக்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

வரும் 8ம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்குவதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வரும் வளாகத்திலேயே நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடப்பது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஈரோடு டிஎஸ்பி ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் வந்தனர்.  

அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்த தேர்தல் வேட்பு மனு தாக்கலை போலீசார் தடுத்து நிறுத்தினர். முறையான அனுமதி பெற்ற பிறகுதான் தேர்தல் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறுகையில்,``காய்கறி வியாபாரிகள் சங்க தேர்தலை நடத்துவதற்கு ஆர்டிஓ மாநகராட்சி, போலீசாரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. அதற்குள் தேர்தலுக்கான நடவடிக்கை தொடங்கப்பட்டதால் தடுத்து நிறுத்தப்பட்டது. எனவே, உரிய அனுமதி பெற்ற பிறகு மட்டுமே தேர்தலை தொடங்க வேண்டும்’’ என்றார்.

Related Stories:

More
>