×

கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை..குழந்தைகளுக்கான தடுப்பூசியும் தேவையற்றது!: டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் கருத்து..!!

டெல்லி: கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை என்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசியும் தேவையற்றது என்றும் எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தற்போது 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மருந்துகள், சிகிச்சைகள் எதுவும் கொரோனா வைரஸுக்கு தீர்வாக இல்லாத சூழலில் தடுப்பூசி மட்டுமே ஒரே ஆறுதலாக உள்ளது. எனவே, உலக நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசியை செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் 2 டோஸ்களையுமே முடித்துவிட்டு, 3வது தடுப்பூசிகளை செலுத்த முயன்று வருகின்றனர்.

தடுப்பூசியின் செயல்திறன் நாளடைவில் குறைந்துவிடுவதால் 3வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. அமெரிக்காவில்  65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில் பூஸ்டர் போடப்பட்ட வீடியோ மற்றும் செய்தியினை வெளியிட்டுளளார்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறனை நிரூபிக்கும் அளவுக்கு விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் இல்லை என்றும் எனவே பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை என்றும் தெரிவித்தார். இப்போது, தகுதியுள்ள அனைவருக்கும் 2 டோஸ் முழுமையாக போடுவதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த நேரத்தில் பூஸ்டர் தடுப்பூசியை போட ஆரம்பித்தால், தகுதியுள்ள ஒருசிலருக்கு முதல் டோஸ் கூட கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிவித்தார். குழந்தைகளுக்கான தடுப்பூசியும் தேவையற்றது என்று கூறிய அவர், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த குழந்தைகள், புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் குழந்தைகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடலாம் என்று தெரிவித்தார்.


Tags : Delhi , Corona, director of booster vaccine, Delhi Aims
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...