சோளிங்கர், ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகள் இடமாற்றம்-கலெக்டர் தகவல்

ராணிப்பேட்டை :  ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட சோளிங்கர், ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,122 முதன்மை வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர்கள், துணை பதிவு அலுவலர்கள் அனைத்து வாக்குச்சாவடிகளை தணிக்கை செய்தனர். கடந்த ஆண்டுகளில் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைக்கு தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு மாறுதல் முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்பேரில் கடந்த 13ம் தேதி ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.

அப்போது, மேற்படி வரைவு வாக்குச்சாவடி பட்டியலின் மீது அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள், தன்னார்வலர்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினருக்கு ஆட்சேபனை இருந்தால்  7 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக கடிதம் மூலமாக அளிக்கலாம், என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 13ம் தேதி முதல் 19ம் தேதி வரை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் ஆகிய இடங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை கூட்டம் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:

அரக்கோணம்(தனி) தொகுதியில் வாக்குச்சாவடிகள் மாற்றம் ஏதும் இல்லை. சோளிங்கர் தொகுதிக்கு உட்பட்ட குன்னத்தூர் கிராமம் பாகம் எண்: 104 அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியானது, பொதுமக்களின் கோரிக்கையின்பேரில் மேட்டுக்குன்னத்தூர் கிராம ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பாகம் எண்:95, நரசிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் வாக்குச்சாவடி பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை தொகுதியில் ராணிப்பேட்டை நகரம் காரை பகுதியில் அமைந்துள்ள அரசினர் குழந்தைகள் இல்லத்தில் உள்ள வாக்குச்சாவடி எண்கள் 162 மற்றும் 164 ஆகியவற்றை மேற்படி இல்ல கண்காணிப்பாளர் கோரிக்கையின்பேரில், அதே வளாகத்தில் உள்ள அரசினர் தீரர் சத்தியமூர்த்தி நடுநிலைப் பள்ளி கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். இதில், டிஆர்ஓ ஜெயசந்திரன் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: