சூடுபிடிக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சார களம்!: காஞ்சியில் ம.நீ.ம., விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை..!!

காஞ்சிபுரம்: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சார களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை செய்தார். ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சார பயணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடங்கினார். முதலாவதாக காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து குன்றத்தூர் மவுலிவாக்கம், பரணிபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார். படப்பையில் திறந்த வேனில் நின்றபடி பரப்புரை செய்த கமல்ஹாசன், உள்ளாட்சி அமைப்புகளின் மேம்பாட்டுக்காக கருத்தியல் ரீதியிலும், களத்திலும் மக்கள் நீதி மய்யம் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட எண்டியூர் கட்டளை பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். பரப்புரை கூட்டத்தில் பேசிய ஓ.எஸ்.மணியன், பொதுமக்கள் தங்கள் நெஞ்சில் வேண்டுமானாலும் 2 அடி அடித்துவிட்டு இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டார். காஞ்சிபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டங்களிலும் பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களிடையே பேசிய சீமான், தேர்தல் ஆணையத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்றும் தேர்தல் நடைமுறைகளில் அமெரிக்காவை பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார். செங்கல்பட்டு மாவட்டம் படாலம், நேத்தப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக திண்டுக்கல் ஐ.லியோனி பரப்புரை மேற்கொண்டார். திமுக ஆட்சிக்கு வந்து 4 மாதங்களில் திமுக நிறைவேற்றியுள்ள தேர்தல் வாக்குறுதிகளை கூறி அவர் வாக்கு சேகரித்தார்.

Related Stories:

More
>