×

தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரிப்பு: என்.சி.ஆர்.பி. அறிக்கை

சென்னை: தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி படிப்பை நிறுத்தும் சிறுவர்களை மூளை சலவை செய்யும் சமூகவிரோதிகள் அவர்களை கூலிப்படையில் சேர்த்து கொலைகள் செய்ய தூண்டுவதே இதற்க்கு காரணம் என சமூக ஆர்வலர்கள்  கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொலை வழக்குகளில் சிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த 2016-ம் ஆண்டு முதல் படிப்படியாக அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற கொலைகளில் 48 சிறார்கள் குற்றம் சாட்டப்பட்டனர். 2017-ல் 53 சிறார்களும், 2018-ல் 75, 2019-ல் 92 என அதிகரித்து 2020-ல் 104 சிறார்கள் கொலைவழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

அதாவது 2016-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த 1,603 கொலைகளில் 48 சிறார்களுக்கு தொர்பு இருந்த நிலையில், 2020-ம் ஆண்டு 2 மடங்காக அதிகரித்துவிட்டது. கடந்த ஆண்டில் மட்டும் மாநிலத்தில் நடைபெற்ற 1661 கொலைகளில் 104 சிறார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக என்.சி.ஆர்.பி. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் சிறார்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சிற்பி என்ற சிறப்பு திட்டம் நடைமுறைப்படுத்த படவிருப்பதாக மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

2016-ம் ஆண்டு தேசிய அளவில் 30,350 கொலைகள் நடந்துள்ளன. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 2.9 சதவிகித பேர் சிறார்கள், 2020-ல் நாட்டில் நிகழ்ந்த 20,133 கொலைகளில் தொடர்புடைய சிறார்கள் 2.6 சதவிகித பேர். ஆனால் தமிழகத்தில் நிலைமை வேறாக உள்ளது. இங்கு 2019-ல் 1,705 கொலைகளும், 2020-ல் 1661 கொலைகளும் நடந்துள்ளன. இதில் தொடர்புடைய சிறார்களின் எண்ணிக்கையோ 92-ல் இருந்து 104-ஆக உயர்ந்துள்ளது. அதாவது தமிழகத்தில் கொலைகள் குறைந்திருந்தாலும் அதில் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பதையே இது காட்டுகிறது.

சென்னை, திருச்சி, மதுரை, திருவள்ளூர், திருப்பூர், பெரம்பலூர், தூத்துக்குடி, சிவகங்கை, மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நடந்த கொலை வழக்குகளில் சிறார்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளிப்படிப்புகளை பாதியில் விடும் சிறார்களை அதிகம் குறிவைக்கும் சமூக விரோதிகள் அவர்களை கூலிப்படையில் சேர்த்து கொலை செய்ய தூண்டுகின்றன. பைக், செல்போன் வாங்கவும், ஆடம்பட செலவுக்கும் தேவையான பணம் கிடைப்பதாலும் அப்பாவி சிறுவர்கள் திசைமாறிப்போவதாக சமூகஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

2020-ம் ஆண்டு தேசிய அளவிலான குற்றங்களில் சிறார்களின் பங்கு 16.4 சதவிகிதமாக உள்ளது. இதில் தமிழம் 4 இடத்தில் உள்ளது. இங்கு 18 வயதுக்குட்பட்ட ஒருலட்சம் சிறார்களில் 16 சதவிகிதம் பேர் குற்றங்களில் ஈடுபடுவதாகவும் என்.சி.ஆர்.பி. அறிக்கை தெரிவிக்கிறது. எனவே தமிழகத்தில் சிறார்கள் தொடர்பான குற்றங்களை தடுப்பதில் அரசு துறைகள் இணைத்து முனைப்புக்காட்ட வேண்டும் குழந்தைகள் நல செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Tamil Nadu ,D.C. ,RB , Murder, Robbery, Juvenile, Increase, NCRB, Report
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...