×

பொதுப்பணித்துறையில் பேக்கேஜ் டெண்டர் முறை ரத்து: தமிழக அரசு அதிரடி உத்தரவு

சென்னை:  தமிழக பொதுப்பணித்துறையில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளி கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுக்கான கட்டிடங்களின் பராமரிப்பு பணிகள், ஏரிகள், கால்வாய்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியை கொண்டு பொதுப்பணித்துறை சார்பில் 3 லட்சத்திற்கு மேலான பணிகள் என்றால் டெண்டர் விடப்படுகிறது. அவ்வாறு விடப்படும் டெண்டரில் சிறிய ஒப்பந்த நிறுவனங்கள் கலந்துகொண்டு போட்டிப்போட்டு டெண்டர் எடுப்பது கடந்த காலங்களில் நடைமுறையாக இருந்து வந்தது.

கடந்த 2017ம் ஆண்டு முதல் பராமரிப்பு பணிகளுக்கு பேக்கேஜ் முறையில் டெண்டர் விட வேண்டும் என்று பொதுப்பணித்துறை தலைமை உத்தரவு பிறப்பித்தது. அதன்பேரில் கட்டிட, நீர்வள பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளுக்கு பொதுப்பணித்துறை சார்பில் பேக்கேஜ் அடிப்படையில் டெண்டர் விடப்பட்டு வந்தது. இதனால், சிறிய ஒப்பந்ததாரர்கள் அந்த டெண்டரில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, தமிழகத்தில் 30 ஆயிரம் ஒப்பந்ததாரர்கள் இருந்தனர்.  இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய ஒப்பந்ததாரர்கள் அடக்கம். இதில், டெண்டர் எடுத்து லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்போது 15 ஆயிரம் சிறிய ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொழிலை விட்டே சென்று விட்டனர்.

இவர்கள், 5 லட்சம் முதல் 30 லட்சம் வரையிலான பராமரிப்பு பணிகளுக்கான டெண்டரில் அவர்கள் கலந்துகொள்வார்கள். தற்போது,  பேக்கேஜ் அடிப்படையில் டெண்டர் விடப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் தற்போது சிறிய ஒப்பந்ததாரர்கள் எந்த டெண்டரையும் எடுக்க முடிவதில்லை.  இந்நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் சிறிய ஒப்பந்ததாரர்கள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் இதுதொடர்பாக முறையிட்டனர். இதை தொடர்ந்து சட்டப்பேரவையில் டெண்டர் முறை ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். இதையடுத்து பேக்கேஜ் டெண்டர் முறையை ரத்து செய்து பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா நேற்று உத்தரவிட்டுள்ளார்.

Tags : TN Government Action Directive , Public Works Department, Government of Tamil Nadu, Order
× RELATED பள்ளி, உயர்க்கல்வி, உள்ளாட்சி,...