×

தென்னிந்திய திருச்சபை இந்தியாவிற்கு கிடைத்த அரிய கருவூலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: தென்னிந்திய திருச்சபையின் 75வது ஆண்டு விழா ராயப்பேட்டையில் உள்ள தூய ஜார்ஜ் பேராலயத்தில் நேற்று நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பிரதமப் பேராயர் தர்மராஜ் ரசாலம் தலைமை தாங்கினார். சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் எம்பிக்கள், எல்.எல்.ஏக்கள், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பேராய துணைத்தலைவர் அசோக் குமார், பேராய செயலாளர்கள் மேன்யல் எஸ்.டைட்டஸ், ஏசுதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாடு முழுக்க கல்வி நிறுவனங்களையும், மருத்துவமனைகளையும் உருவாக்கி அனைவருக்கும் கல்வி மற்றும் மருத்துவம் என்ற லட்சியப் பாதையில் வெற்றிப்பயணம் செய்து கொண்டிருக்கக்கூடிய இந்த திருச்சபை தமிழ்நாட்டிற்கும், இந்திய நாட்டிற்கும் கிடைத்த அரிய கருவூலம். இந்தியாவின் மத நல்லிணக்கத்திற்கும் மதசார்பின்மைக்கும் ஏற்ற சாதி, சமயமற்ற நல்வாழ்விற்காக தென்னிந்திய திருச்சபை இதுவரை ஆற்றியுள்ள ஆக்கப்பூர்வமான பணிகளை நன்றியுணர்வுடன் நினைவுகூர்ந்து தென்னிந்திய திருச்சபை இன்னும் பல நூறு ஆண்டு காலம் கம்பீரமாக தனது வெற்றிப்பயணத்தை தொடர்ந்திட முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் அமோக வெற்றி காணவும் முழு மனதோடு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு, இன்றைக்கு தமிழகத்திலே நடந்து கொண்டிருக்கக்கூடிய அரசு உங்களால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய அரசு.

நான் பலமுறை அடிக்கடி எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பது நான் எனது அரசு என்று சொல்லமாட்டேன் அல்லது எங்களுடைய அரசு என்று கூறமாட்டேன். இது நம்முடைய அரசு. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறபோது பெரும்பான்மை இடங்களில் திமுக வெற்றிபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற செய்தி வந்தபோது நான் அப்போது செய்தியாளர் இடத்தில் சொன்னேன், அமையவிருக்கக்கூடிய ஆட்சி மக்களுக்கு பணியாற்றக்கூடிய ஆட்சியாக அமையும்,  வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து என்னுடைய பணி அமையும். இன்னொன்றையும் குறிப்பிட்டுச் சொன்னேன். வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய வகையிலே, வாக்களிக்க தவறியவர்கள், இந்த ஆட்சிக்கு நாம் வாக்களிக்காமல் இருந்து விட்டோமோ என்று வருந்தக் கூடிய அளவில் இந்த ஆட்சி அமையும் என்று சொல்லியிருக்கிறேன்.

தேர்தல் நேரத்திலே போட்டியிடக்கூடிய கட்சிகளெல்லாம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பொறுப்புக்கு வந்தால் என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை வாக்குறுதிகளாக வழங்குவது வழக்கம். ஆனால், திமுகவைப் பொறுத்த வரையிலே, சொன்னதைத் தான் செய்வோம் செய்வதைத் தான் சொல்வோம் என்ற அடிப்படையிலே வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக, நடந்து முடிந்த பொதுத் தேர்தலைப் பொறுத்தவரைக்கும். ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வழங்கினோம்.  அந்த 500க்கு மேற்பட்ட வாக்குறுதிகளில் இன்றைக்கு 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று கம்பீரமாக இந்த நேரத்தில் சொல்கிறோம். ஆகவே, மக்களுக்கு பணியாற்றுகிற அரசாக, உங்களால் உருவாக்கித் தரப்பட்டிருக்கக்கூடிய அரசாக இந்த அரசு என்றைக்கும் இருக்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Tags : South Indian Church ,India ,Chief Minister ,MK Stalin , Rare Treasury of the South Indian Church in India: Chief Minister MK Stalin's Praise
× RELATED மக்களுக்கு சாதனைகளை செய்யக்கூடியது...