திருவேற்காடு, பூந்தமல்லி நகராட்சி 100% தடுப்பூசி செலுத்தி சாதனை

பூந்தமல்லி: கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, மாவட்டம் முழுவதும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவேற்காடு மற்றும் பூந்தமல்லி நகராட்சிகளில் கடந்த சில வாரங்களாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்குடன் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு பல்வேறு பரிசுத் திட்டங்களை அறிவித்திருந்தனர். இதனையடுத்து ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

திருவேற்காட்டில் 24 இடங்களில் நேற்று நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாம்களை நகராட்சிகளின் மண்டல இயக்குநர் சரவணன், இணை இயக்குநர் உமா மகேஸ்வரி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, நகராட்சி ஆணையர் வசந்தி, பொறியாளர் நளினி, சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் மற்றும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உடனிருந்தனர். இதேபோல், பூந்தமல்லியில் நடைபெற்ற முகாம்களையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது பூந்தமல்லி நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், பொறியாளர் நடராஜன், சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன், பொறியியல் துறை மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

இந்நிலையில், நேற்று திருவேற்காடு நகராட்சியில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 67,654 பேருக்கும், பூந்தமல்லி நகராட்சியில் 49,042 பேருக்கும் இதுவரை முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த நகராட்சிகள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார். மேலும், இந்த பகுதிகளில் குடியேறியவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் குறித்து வீடு வீடாக ஆய்வு செய்து வரும் வாரங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி இலக்கினை எட்டுவதற்காக பணியாற்றிய நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

Related Stories:

More
>