×

பிஇ., பிடெக் கவுன்சலிங் தொடக்கம் விருப்பமுள்ள கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்தனர்

சென்னை:  பி.இ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கடந்த ஜூலை 26ம் தேதி முதல் www.tneaonline.org அல்லது www.tndte.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தொழில்நுட்ப கல்வி இயக்கம் அறிவித்திருந்தது. அதன்படி மொத்தம் 1 லட்சத்து 74 ஆயிரத்து 490 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இவர்களில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 45 பேர் கலந்தாய்வு கட்டணத்தை செலுத்தியுள்ளனர். மேலும் 2,722 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை. இவர்களையும் சேர்த்து மொத்தம் 3,290 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து 1,39,033 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வில் 440 கல்லூரிகளில் உள்ள 1,51,870 சேர்க்கை இடங்களில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. கடந்த 17ம் தேதி முதல் 24ம் தேதி வரை இணைய வழியில் நடந்த அரசு பள்ளி மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 6 ஆயிரத்து 442 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அக்.17ம் தேதி வரையில் நடைபெற உள்ள கலந்தாய்வு, நான்கு சுற்றுகளாக ஆன்லைன் மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு சுற்றுக்கும் கலந்தாய்வுக்கு கட்டணம் செலுத்த 2 நாட்கள், கல்லூரிகளை தேர்வு செய்ய 2 நாட்கள், தற்காலிக ஒதுக்கீடு உத்தரவை உறுதி செய்ய 2 நாட்கள், இட ஒதுக்கீட்டை இறுதி செய்ய ஒருநாள் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பிரிவு மாணவர்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 973 பேருக்கு, கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தரவரிசைப் பட்டியலில் 1 முதல் 14 ஆயிரத்து 788 வரை உள்ளவர்களுக்கு நேற்று கலந்தாய்வு தொடங்கியது. மாணவர்கள் ஆர்வமுடன் விருப்பமுள்ள கல்லூரிகளை தேர்வு செய்தனர். பொதுப் பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வு அக்.5ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் இத்துடன் தொழிற்கல்வி பிரிவினருக்கான ஒரு சுற்று கலந்தாய்வும் நேற்று தொடங்கியது. வருகிற அக்.5ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

Tags : PE ,PTech , PE., BTech Counseling Startup Students selected colleges of choice
× RELATED போடி அருகே கோயில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை