சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியிடம் நேரில் நலம் விசாரித்த முதல்வர்: கடவுளே நேரில் வந்தது போல் உள்ளது என தாய் உருக்கம்

சென்னை: ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.  கடவுளே நேரில் வந்தது போல் இருந்தது என சிறுமியின் தாய் உருக்கமாக கூறினார். சேலம் மாவட்டம் அரிசிபாளையம் வேல்சாமி தெருவை சேர்ந்தவர் ராஜ நந்தினி (42). இவருடைய மகள் ஜனனி ( 14). இவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார். ராஜ நந்தினிவுடைய  கணவர்  விஜயகுமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் ஜனனிக்கு கடந்த 2019ம் ஆண்டு முதல் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டிருந்தது.

அதனால் மகளை காப்பாற்ற ராஜ நந்தினி 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் தன்னுடைய ஒரு கிட்னியை மகளுக்கு தானமாக கொடுத்தார். இந்த அறுவை சிகிச்சை கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செய்யப்பட்டது. அவரிடம் இருந்த பணம், உறவினர்கள் உதவியது என 30 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்டது. இருந்தபோதும் கல்லீரல் பாதிக்கப்பட்டதால் சிறுநீரகம் வேலை செய்யவில்லை என்று மருத்துவர்கள் கூறினர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ராஜ நந்தினி முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு உதவி கேட்டு மனு அளித்தார்.

மேலும் தன்னுடைய மகள் முதலமைச்சருக்கு உதவி கேட்டு பதிவு செய்த ஆடியோவை அனுப்பி வைத்தார். அதை பார்த்த முதல்வர் அந்த சிறுமிக்கு உதவி செய்ய சுகாதாரத்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து ராஜ நந்தினியும் அவரின் மகளும் டயாலிசிஸ் செய்ய அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீரென ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்து  சிகிச்சை பெற்றுவரும் ஜனனியை சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும் மருத்துவர்களிடம் சிறுமிக்கு நல்ல சிகிச்சை அளிக்கவும் உத்தரவு பிறப்பித்தார். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ராஜ நந்தினி கூறுகையில், ‘‘என் மகள் 2 சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க முடியாமல் பணமில்லாமல் கணவனைப் பிரிந்து மிகவும் கஷ்டப்பட்டு இருந்தோம். இந்நிலையில் முதலமைச்சரிடம் உதவிகேட்டு அதன்பேரில் அவர் என்னுடைய மகளுக்கு சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். நேற்று திடீரென மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. யாருமே உதவி செய்யாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் கடவுளே நேரில் வந்து உதவி செய்வதுபோல் எங்களுக்கு உள்ளது.நானும் ஒரு கிட்னி தானம் கொடுத்ததால் என்னுடைய உடலையும் பாதுகாத்துக்கொள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்’’  என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். இந்த திடீர் ஆய்வின்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மருத்துவமனை முதல்வர் பாலாஜி, நிலைய மருத்துவ அதிகாரி ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories:

More
>